பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டியுள்ள பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ரூபின், இஸ்ரேலின் ‘OPERATION WRATH OF GOD’ என்ற கடவுளின் கடும் கோபம் மாதிரியான பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ நடவடிக்கையை இந்தியா முழுவீச்சில் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “கடவுளின் கடும் கோபம் ” என்றால் என்ன? மைக்கேல் ரூபின் ஏன் அப்படி சொன்னார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அரசியல் ரீதியாகத் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்காக, ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. 1936ம் ஆண்டு ஏற்பட்ட கறையைப் போக்கவும், நாட்டின் மரியாதையை மீண்டும் நிலைநிறுத்தவும், 1972 ஆம் ஆண்டில் முனிச் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனி நடத்தியது.
யூதர்களின் எதிரி என்ற பொதுக்கருத்தை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த ஒலிம்பிக்கில் யூத விளையாட்டு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். 1972ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி, அதிகாலை 4.30 மணிக்கு, ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்குள், பாலஸ்தீன பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்ரேல் பயிற்சியாளர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர்.
பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சிறையிலிருந்த 234 பாலஸ்தீனப் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்தனர். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்று கூறிய அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர், நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு, இஸ்ரேல் பிணைக்கைதிகளோடு பயங்கரவாதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விமான நிலையத்தில் வைத்துத் தாக்குதல் நடத்தி,பிணைக்கைதிகளை மீட்க ஜெர்மனி காவல் துறை ரகசியத் திட்டம் வைத்திருந்தது. ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
பயங்கரவாதிகளுக்கும் ஜெர்மனி காவல் துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர். துரதிர்ஷ்டமாக 5 ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் 6 பயிற்சியாளர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர். ஜெர்மனியின் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப் பட்டார்.
முனிச் ஒலிம்பிக் படுகொலைக்குப் பழிவாங்க உத்தரவிட்ட, அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர் இந்த பணியை மொசாத்திடம் ஒப்படைத்தார். பயங்கரவாதிகளைத் தேடிப்பிடித்துக் கொல்லும் ரகசிய நடவடிக்கைக்கு ‘OPERATION WRATH OF GOD’- ‘கடவுளின் கடும் கோபம்’ என்று பெயரிடப்பட்டது.
பிரான்ஸ், சிரியா, நார்வே, சைப்ரஸ், லெபனான் உட்பட பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் உளவுத்துறை பழிவாங்கும் நடவடிக்கைகளை இரகசியமாக மேற்கொண்டனர். பாலஸ்தீனப் பயங்கரவாத அமைப்பின் கருப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாத தலைவர்கள் அடுத்தடுத்து குறிவைத்துக் கொல்லப்பட்டனர். 1972 ஏப்ரல் 10-ம் தேதி லெபனானின் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கரவாதி முகமது யூசுப் அல்-நஜார், கமல் அட்வான், கமல் நாசர் ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதே ஆண்டு, அக்டோபர் 16-ல் இத்தாலி தலைநகர் ரோமில், பயங்கரவாதி அப்தெல் வால் ஸ்வைட்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி, பாரிஸில், பயங்கரவாதி மஹ்முத் ஹம்சாரி கொல்லப்பட்டார். 1973 ஆம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி சைப்ரஸில் பயங்கரவாதி ஹுசைன் அயாத் அல்-சி கொல்லப்பட்டார்.
1979-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அலி ஹாசன் சலாமே என்பவர் கார் வெடிகுண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். 1988-ம் ஆண்டு வரை ‘கடவுளின் கடும் கோபம்’ ஆபரேசன் நீடித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 1200 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இன்னமும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வருகிறது.
இஸ்லாமியப் பயங்கர வாதத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் எப்படியோ அப்படி, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்று முன்னாள் பென்டகன் உயர் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ‘பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கக் கூடாது’ என்ற மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு தாக்குதலைக் கூட, ஒரே ஒரு உயிரை இழந்தால்கூட அதை அதிகமானதாகக் கருதும் இந்தியா பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை ஓயாது என்று உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
தங்களது வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாகவே வைத்துக்கொண்டு, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, ஒரு சீரான, ஒருங்கிணைந்த மற்றும் சமரசமற்ற அணுகுமுறையால் மட்டுமே பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும் என்றும் கூறியிருந்தார்.
பயங்கரவாதி என்பவர் தனிநபர் என்றும், பயங்கரவாதம் என்பது ஒரு நெட்வொர்க் என்றும் கூறிய பிரதமர் மோடி, பயங்கரவாதியைக் கொன்றால் மட்டும் போதாது, பயங்கரவாத நெட்வொர்க்கையே வேரறுக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.
நவீனத் தொழில் நுட்பத்தில் DARKNET எனப்படும் பிரத்யேக இணையம் மற்றும் தனிப்பட்ட கரன்சிகள் மூலம் பல சவால்கள் இருப்பதையும் பிரதமர் மோடிசுட்டிக் காட்டியுள்ளார். கூடுதலாக, பயங்கர வாதத்தை ஆதரிக்கும் எந்த நபருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்ற சூழலை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து வேட்டையாடி தண்டனை வழங்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பயங்கர வாதிகளின் 9 பயங்கர வாத தளங்களையும், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்களையும் தரைமட்டமாக்கி உள்ளார். இந்த நடவடிக்கையில் 100 க்கும் மேற்பட்ட ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடவுளின் கடும் கோபத்தை விடவும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போர், ஆப்ரேஷன் காளி என்று சொல்லும் அளவுக்கு உக்கிரத்துடனும் உறுதியுடனும் இருக்கிறது.