பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, நாட்டில் உள்ள மகள்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும், மதத்தின் பெயரை கேட்டு சுற்றுலா பயணிகள் கருணையின்றி கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நமது வீரர்கள் சிந்தூர் ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் என கூறிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நீதிக்காக நடத்தப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும், பாரதம் இந்த அளவிற்கு தாக்குதல் நடத்தும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, பயங்கரவாத முகாம்களுக்கு நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் முடிவு கட்டியுள்ளன என கூறினார்.
மேலும், மே 7-ம் தேதி நாம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தோம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.