ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட 52 கண்காணிப்பு செயற்கைக்கோள்களை இந்தியா விரைவில் விண்ணில் செலுத்த உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பொதுமக்கள் மற்றும் இராணுவ பயன்பாடுகளுக்கான பல்வேறு செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) பணியில் இந்தியா இறங்கியது.
நிலம் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த SBS திட்டம், 2001 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. SBS 1 என்ற முதல் கட்டத்தின் நோக்கம், கண்காணிப்புக்காக CARTOSAT 2A ((கார்டோசாட் 2A,)) CARTOSAT 2B ((கார்டோசாட் 2B)), Eros-B ((ஈரோஸ் B)) மற்றும் RISAT-2 ((ரிசாட் 2)) ஆகிய நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதாகும்.
2013ம் ஆண்டில் SBS 2 என்ற இரண்டாம் கட்டத்தில் CARTOSAT 2C (கார்டோசாட் 2C), CARTOSAT 2D (கார்டோசாட் 2D), CARTOSAT 3A (கார்டோசாட் 3A), CARTOSAT (கார்டோசாட் 3B), microsat 1 (மைக்ரோசாட் 1) மற்றும் RISAT 2A (ரிசாட் 2A) ஆகிய ஆறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த, SBS 3 என்ற மூன்றாம் கட்டத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் 52 கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டது.
CartoSat-2c போன்ற தற்போதுள்ள செயற்கைக்கோள்கள், நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இலக்குகளின் செயற்கைக் கோள் படங்களை வழங்குகிறது. நிகழ் நேரக் கண்காணிப்பை மேம்படுத்தும் விதத்தில் SBS மூன்றாம் கட்ட செயற்கைக் கோள்கள் படங்களை அனுப்பும் என்று கூறப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS), கடந்த அக்டோபர் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) பணியின் மூன்றாம் கட்டத்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. 27,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தில் கீழ் தயாரிக்கப் படும் 52 கண்காணிப்பு செயற்கைக் கோள்களில், 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரிக்கிறது. மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை 3 தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்த செயற்கைக் கோள்கள், தாழ்வான பூமி சுற்றுப்பாதை (LEO) மற்றும் புவிசார் சுற்றுப்பாதை (GEO) ஆகியவற்றில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக் கோள் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து தேசியப் பாதுகாப்பு கவுன்சில் நிரவகிக்கவுள்ளது.
இந்தியாவின் லட்சிய உளவு செயற்கைக்கோள் திட்டம் என்ற விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், தாழ்வான புவிசார் சுற்றுப்பாதையில் 52 கண்காணிப்பு செயற்கைக்கோள்களைச் செலுத்த உள்ளது. AI ஐப் பயன்படுத்தி போர்க்களத்தில் வெவ்வேறு இடத்தில் இருக்கும் இராணுவவீரர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளப் பயன்படும் வகையில் இந்த செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
உதாரணமாக, உயர்ந்த சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஒரு செயற்கைக்கோள், குறைந்த உயரத்தில் உள்ள ஒரு செயற்கைக்கோளுடன் தொடர்புகொண்டு, ஒரு குறிப்பிட்ட சாத்தியமான புள்ளியில் அதிக கவனம் செலுத்தும் நுண்ணறிவைப் பெற்று தகவலைப் பரிமாறிக் கொள்ள முடியும். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளைக் கண்காணிப்பதற்கும்,இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பதற்கும் இந்த உளவு செயற்கைக் கோள்கள் பயன்படும் என்று கூறப் பட்டுள்ளது.
சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களையும் இந்த செயற்கைக்கோள்கள் கண்காணிக்கும். மேலும், நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் உடனடியாக, இந்தியா பதிலளிக்க இந்த கண்காணிப்புகள் உதவும்.
பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையான ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் நிலையில், இப்போது , 52 கண்காணிப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணியைத் தீவிரப் படுத்தி உள்ளது.
2028 ஆம் ஆண்டு இறுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட முந்தைய காலக்கெடுவுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.