ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து, திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருவண்ணாமலையில் பேரணி நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் 181 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு, ராணுவத்தை பாராட்டி முழக்கமிட்டனர்.
இதேபோல், ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில், ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இதில், பாஜக மாவட்ட தலைவர் S.M.செந்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து முழக்கமிட்டனர். வ.உ.சி பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணி இடையன்காட்டு வலசு சந்திப்பில் நிறைவு பெற்றது.