வங்கதேசத்தில்,தேர்தலைத் தாமதப்படுத்தும் முகமது யூனுஸின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆகஸ்ட் மாதம், அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக, ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்ட யூனுஸ், நாளாக நாளாக அதிகார வெறியின் வேகத்துக்கு ஆடும் பொம்மையாக மாறினார்.
தலைமை ஆலோசகர்தான் என்றாலும் பிரதமருக்குச் சமமான அதிகாரங்களுடன் வங்கதேச அரசின் தலைவராகவே யூனுஸ் உள்ளார். அரசியலமைப்பு ரீதியாகத் தேர்தலை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கொண்டு வருவதே யூனுஸின் முதன்மையான பொறுப்பு. ஆனால், தேர்தல் நடத்துவதற்கான எண்ணமே இல்லை என்பதையே யூனுஸின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
“தேசிய ஒருமித்த கருத்து” மற்றும் “தேர்தல் சீர்திருத்தம்” ஆகியவற்றின் அவசியத்தை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டு ஜூலைக்குள் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நீடிக்கவே பாகிஸ்தானும் சீனாவும் விரும்புகின்றன. அதற்கேற்ப, அவ்விரு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தவே முழுநேரத்தையும் யூனுஸ் செலவிட்டு வருகிறார்.
பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கதேசத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் சீனா செய்துள்ளது. ஒருவேளை தேசிய உணர்வுள்ள ஜனநாயக அரசு அமைந்தால், அது சீனாவின் முயற்சிக்குப் பின்னடைவாக அமையலாம். எனவே, யூனுஸின் இடைக்கால ஆட்சி தொடரவே சீனா விரும்புகிறது.
அதே நேரம் இஸ்லாமிய பயங்கரவாத கொள்கை காரணமாகவே யூனுஸின் இடைக்கால அரசு வங்கதேசத்தில் நீடிக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில், முந்தைய ஷேக் ஹசீனா ஆட்சியில், வங்கதேசம் இந்தியாவுடனான தனது உறவுகளை வலுப்படுத்தி வைத்திருந்தது. மேலும், இஸ்லாமிய பயங்கரவாதிகளைத் தீவிரமாக ஒடுக்கியது. பாகிஸ்தானின் ISI யின் எல்லை தாண்டிய செயல்பாடுகளைக் ஷேக் ஹசீனா அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.
ஆனால், தடை செய்யப்பட்டிருந்த Jamaat-e-Islami (JeI) ஜமாத்-இ-இஸ்லாமி, Hizb ut-Tahrir ஹிஸ்ப் உத்-தஹ்ரிர், Ansarullah Bangla அன்சாருல்லா பங்களா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தடையை யூனுஸ் நீக்கியுள்ளார். ஹசீனா அரசு வீழ்ச்சி அடைந்த உடன்,வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைகளை இந்த இஸ்லாமிய அமைப்புக்களே முன்னின்று நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு, வங்கதேசத்தின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அகற்றுவதற்கான ஒரு படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம், அவாமி லீக் கட்சியின் சரிவுக்குப் பின் வங்கதேச தேசியவாத கட்சி, அந்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், வேண்டுமென்றே தேர்தல்களைக் காலவரையின்றி ஒத்திவைக்கவும், குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கவும் யூனுஸ் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தச் சூழலில், சமீபத்தில் இராணுவத் தளபதி Waker-Uz-Zaman வேக்கர்-உஸ்-ஜமானிடம் ஆலோசிக்காமல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
உடனடியாக தேர்தலை அறிவிக்க யூனுஸுக்கு அழுத்தம் கொடுத்து வரும் இராணுவத் தளபதி, இது தொடர்பாகப் பிற இராணுவத் தளபதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய வெளிநாடுகளின் தலையீடு காரணமாக வங்க தேசத்தில் உள்நாட்டுக் குழப்பமும் அரசியல் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளின் விருப்பப் படியே யூனுஸ் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று வங்கதேச ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவிசார் அரசியல் போர்க்களமாக மாறியுள்ள வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரானதும் சர்வதேச புவிசார் அரசியல் விளையாட்டின் மையப் புள்ளியாக முகமது யூனுஸ், மாறியுள்ளார்.