நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில், உதகை , கூடலூர் , குன்னூர் உட்பட மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் 283 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்டு, மருத்துவ வசதியுடன் 456 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 42 மண்டல குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 80 பேர் என 110 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, உதகை படகு இல்லம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம், பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, குன்னூர் லேம்ஸ் ராக் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.