ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி தலைவரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் – மோளாக்கவுண்டம்பாளையம் இடையில் மின் மயானம் அமைக்கப் பேரூராட்சி அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. மின் மயானம் அமைந்தால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 7 கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் 7 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மின் மயானம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் சாணார்பாளையம் பகுதியில் நடைபெற்றபோது கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.