மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது எழுந்திருக்கும் மோசடி புகார்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயில் தொழிலாளி மீது திருட்டு புகார் அளித்த மதுரையைச் சேர்ந்த பேராசிரியை நிகிதாவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
மடப்புரம் கோவிலுக்குச் சென்ற போது தன் நகையைத் திருடியதாக அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா திண்டுக்கல்லில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த நிகிதாவின் தந்தை உதவி ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார்.
தந்தையின் அரசுப் பணியை வைத்து 2011 ஆம் ஆண்டு முதல் அரசு வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் நிகிதா பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு மதுரை திருமங்கலம் காவல்நிலையத்திலும் நிகிதா, அவரது தந்தை ஜெயப்பெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு என ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆலம்பட்டியில் உள்ள வீட்டைத் தனியார் கல்லூரி நிர்வாக மேலாளர் ஒருவருக்கு 70 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக 25 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்ட நிகிதா, பின்னர் மதுரை வங்கி ஒன்றில் அதே வீட்டை 50 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மதுரை செக்காணூரனி அருகே தேங்கல்பட்டியைச் சேர்ந்த செல்வத்திடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசுவேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணத்தை வாங்கிக்கொண்டு நீண்ட நாட்களாக அரசு வேலை வாங்கித்தராத நிகிதாவை தொடர்பு கொண்ட போது மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கின்றனர்.
சென்னை, மதுரை, கோவை, கரூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை நிகிதா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருப்புவனத்தில் நகை திருட்டு என்பது கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மடப்புரம் கோயில் காவலாளி விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மூலம் நிகிதா அழுத்தம் கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அஜித்குமார் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி? அவருக்கும் நிகிதாவுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியை அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அதோடு, உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்களுக்கு 50 லட்சம் வரை பேரம் பேசியதும், அதில் திமுக நிர்வாகிகள் இருந்திருப்பதும், இவ்விவகாரத்தில் திமுகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிகிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா ? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.