வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்பட வேண்டுமெனில் ரிதன்யாவை சித்ரவதைக்குள்ளாக்கிய குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
திருமணமான 77 நாட்களுக்குள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்டு கொண்ட ரிதன்யா கடைசியாக மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் தான் இவை.
3 கோடி ரூபாய் செலவில் திருமணம், 300 சவரன் தங்க நகை, 70 லட்ச ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் ஆகியவை கொடுத்தபின்பும் இன்னமும் வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் சித்ரவதைக்குள்ளாக்கியதே ரிதன்யாவின் விபரீத முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ரிதன்யாவின் கணவன் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ரா தேவி ஆகிய மூவரும் இணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் ஒவ்வொன்றையும் தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா வெளியிட்ட ஆடியோக்கள் நம் கண்முன்னே நிறுத்துகின்றன.
திருமணமாகி இரண்டு வாரத்திற்குள்ளாகவே வரதட்சணை விவகாரத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் தன் தந்தை வீட்டிற்கு வந்த ரிதன்யா 20 நாட்களுக்கு மேலாக தங்கியுள்ளார். அப்போது ரிதன்யாவின் பெற்றோர் சமாதானம் செய்து கவினின் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் மீண்டும் மீண்டும் ரிதன்யா மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.
ரிதன்யாவின் கணவர் கவினுக்குச் சொல்லிக் கொள்ளும் படியான தொழில் எதுவும் இல்லாத நிலையில், பல வீட்டில் மாப்பிள்ளைக்குப் பலநூறு கோடி செலவு செய்து தொழில் ஏற்பாடு செய்து தரும் நிலையில் உங்கள் வீட்டில் அப்படி எதுவும் செய்யவில்லை எனக்கூறி ரிதன்யாவை துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் 500 சவரன் நகை போடுவதாகக் கூறிவிட்டு அதில் பாதியளவு கூட போடவில்லை எனவும் ரிதன்யா மீது கவினின் ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து உளவியல் ரீதியாக தொடர் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள முடியாத ரிதன்யா வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறந்துவிட்ட தன் மகளை மீட்க முடியாது என்றாலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக ரிதன்யாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ரிதன்யாவின் தற்கொலைக்கு கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் போதும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரிதன்யாவின் கணவர் கவின்குமாரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
கவின் குமாரின் தந்தை வழி தாத்தா கிருஷ்ணன் கடந்த 1986 ஆண்டு முதல் 1991 வரை திருப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும், தற்போது திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருக்கிறார்.
அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மூலமாகத் தமிழக அரசின் உயர்மட்டத்தைத் தொடர்பு கொண்டதன் விளைவே விசாரணை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மகளை இழந்து நிற்கும் தங்களை ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைத்து அலைக்கழிப்பதாகவும் ரிதன்யாவின் தந்தையும், தாயும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ரிதன்யாவின் தற்கொலையும், அதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஆடியோவும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை எனும் பெயரில் நடைபெறும் மோசடிகளையும், கொடுமைகளையும் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யாவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டுமெனில், அதற்குக் காரணமாக இருந்த கவினின் குடும்பத்திற்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டியது அவசியம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.