புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தந்தை கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தொண்டமநத்தம் பகுதியைச் சேர்ந்த நாதன் சபாபதி அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களது இரு மகன்களான துவாரகேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் முத்தரையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
வழக்கம்போல் நேற்று நாதன் சபாபதி தனது இரு மகன்களையும் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொறையூர் அடுத்த ஊசுட்டேரி அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, டிப்பர் லாரி ஒன்று நாதன் சபாபதியின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இரு மாணவர்களும் தந்தை கண் முன்பே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வில்லியனூர் போலீசார் மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த தகவலை அறிந்து வந்த மாணவர்களின் உறவினர்கள், ஊசுட்டேரி சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்த போலீசார், விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து சம்பவம் தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.