உத்தரப்பிரதேசத்தில் 70 வயதான சங்கூர் பாபா தலைமையில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மத மாற்ற மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பலவிதமான நடவடிக்கைகள் மூலம் இந்து பெண்களைக் குறிவைத்து இஸ்லாத்துக்கு மதமாற்றிய திட்டமிட்ட நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யார் இந்த சங்கூர் பாபா ? அவரின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முதன் முதலாக, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நவீன் ரோஹ்ரா, தனது மனைவி நீது மற்றும் மகளுடன் இஸ்லாத்துக்கு மதம் மாறிய போது, சங்கூர் பாபாவின் பெயர் பரவலாகத் தெரியவந்தது.
மும்பையின் முலுண்டைச் சேர்ந்த சிந்தி இந்து பெண்ணான நீதுவைத் தான் முதலில் இஸ்லாத்துக்கு சங்கூர் பாபா மதம் மாற்றியிருக்கிறார். 2015ம் ஆண்டு, பாபாவால் மதம் மாறிய நீது பிறகு, தனது கணவரையும் மகளையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியுள்ளார். இந்த மத மாற்றத்துக்கு துபாயில் சான்றளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு, நவீன் ரோஹ்ரா, நீது மற்றும் அவரது மகள் ஆகியோர் நிரந்தரமாக பல்ராம்பூரில் குடியேறினார்கள். இதற்கிடையே சுமார் 19 முறை ஐக்கிய அரபு அமீரத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சங்கூர் பாபா என அழைக்கப்படும் ஜமாலுதீன் ஷா, பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்ரா மாஃபி கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பதால் “சங்கூர்” என்று அழைக்கப்பட்டார்.
2010ம் ஆண்டு, மும்பைக்கு இடம் பெயர்வதற்கு முன் தனது கிராமத்தில் இஸ்லாமிய மத தாயத்துக்களைச் சைக்கிளில் சென்று விற்றுவந்த சங்கூர், மும்பையில் பிரபல ஹாஜி அலி தர்காவுக்குத் தொடர்ந்து சென்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். கூடவே ரத்தின மோதிரங்களையும் விற்பனை செய்து வந்தார்.
இந்த தர்ஹா மூலம் கிடைத்த தொடர்புகளை வைத்துக்கொண்டு,தன்னை ஒரு இஸ்லாமிய மத குருவாகக் காட்டிக் கொண்டார். விசுவாசமான பின்தொடர்பவர்களின் தளத்தை உருவாக்கினார். 2020ம் ஆண்டு சாங்கூர் தன்னை ஒரு ‘பியர் பாபா’ என்று பெயர்சூட்டிக் கொண்டு, சட்ட விரோத மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
பல போலி அறக்கட்டளைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஏற்படுத்தியதுடன், நிதி மோசடி செய்வதற்கும், சொத்துக்களைப் பெறுவதற்கும் இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தினார்.
காத்மாண்டு, நவல்பராசி, ரூபாந்தேஹி, பாங்கி உள்ளிட்ட நேபாள எல்லை மாவட்டங்களில் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து பணம் பெற்று 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கபட்டன. சவுதி அரேபியா, துருக்கி, துபாய், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்துதான் அந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வந்துள்ளன. இந்த நிதியை சங்கூர் தனது மதமாற்ற மோசடிக்காகப் பயன்படுத்தினார்.
இந்துப் பெண்களைக் கவர்ந்து இஸ்லாத்துக்கு மத மாற்றுவதற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார். இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளங்களை மறைத்து, போலியாக இந்து பெயரையும் அடையாளத்தையும் பயன்படுத்தி இந்துப் பெண்களைக் குறிவைத்துக் கவர்ந்து வந்தனர்.
கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்து, இந்துப் பெண்களுக்கு இஸ்லாமிய இளைஞர்களுடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். சட்ட விரோத மதமாற்றம் செய்வதற்காகவே, ஒரு நிலையான ஊக்கத்தொகை அமைப்பையும் நடத்திவந்தார் சங்கூர் பாபா. பிராமண, சீக்கிய அல்லது க்ஷத்திரிய பெண்களின் மதமாற்றங்களுக்கு 16 லட்சமும், பிற்படுத்தப் பட்ட பெண்களுக்கு 12 லட்சமும், மற்ற சாதியினருக்கு 10 லட்சமும் விலையாக நிர்ணயித்து வைத்துள்ளார்.
சங்கூர் பாபா மட்டுமல்லாமல், அவரது முழு குடும்பமும், நீது குடும்பமும் சட்ட விரோத மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் , சங்கூர் பாபாவின் மகன் மெஹபூப் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். ஜூலை ஐந்தாம் தேதி, லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் சங்கூர் பாபா மற்றும் நீதுவை உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர்.
ஒரு ஆடம்பரமான பல மாடி வளாகம் உட்படப் பல சொத்துக்களை வாங்கி குவித்திருந்த சங்கூரின் சொத்துக்கள் எதற்கும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. எனவே, சங்கூரின் ஆடம்பர வீடு இடிக்கப்பட்டன. ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியவர்களுக்கு நிதி உதவி அளிப்பதாகக் கூறி மதமாற்ற நடவடிக்கைகளில் சங்கூரும் நீதுவும் ஈடுபட்டதாகவும், மறுத்தவர்களை மிரட்டி மதமாற்றம் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக சங்கூர் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இருந்து, பணத்தைப் பெற்று வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாயில் 200 கோடி ரூபாய் மட்டுமே மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பெறப்பட்டதாகவும், மீதி 300 கோடி ரூபாய் ஹவாலா கும்பல் மூலம் பெறப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சங்கூர் பாபாவின் நெட்வொர்க்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சங்கூரின் நிதி முறைகேடு தொடர்பாக உத்தரப்பிரதேசம், மும்பையில் 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளனர்.
சங்கூரால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாபா தனது நெட்ஒர்க்கில் பேசும் போது 2047க்குள் இந்துஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றப்பட வேண்டும் என்பது தான் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் பல இஸ்லாமிய ‘சங்கூர் பாபாக்கள்’ பதுங்கியிருக்கும் நிலையில், நாட்டில் இந்துக்கள் மட்டுமல்லாது, பாரதத்தின் ஆன்மாவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.