இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும் அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தேசிய வர்த்தகர்கள் நலவாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அன்வர்ராஜா தற்போது திமுகவிற்கு சென்றதால் திமுகவின் மொழியை பேசுகிறார். திமுக மொழியை பேசினால்தான் திமுகவில் அவருக்கு மரியாதை; அன்வர் ராஜாவின் தனிப்பட்ட உள்ளக்குமுறலாக அவரது கருத்தை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியாவில் பாஜகவால் எந்தக் கட்சியும் உடையவில்லை; பாஜகவால் எந்தக் கட்சியும் குழப்பம் வரவில்லை; கடின உழைப்பால் மட்டுமே பாஜக உயர்ந்துள்ளது. எந்தக் கட்சியையும் உடைக்க வேண்டும், பிரிக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார்; இதில் குழப்பமில்லை எனறும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அந்த முடிவை எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.