தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இது வரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சப்படும் சூழலில் தமிழகம் தற்போது இருக்கிறது என்பது வெட்கக்கேடு. திமுக அரசு, குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை,
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம். கொலை செய்யப்பட்ட பெண் வசித்து வந்த அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியின் முன்பாக, டாஸ்மாக் மதுபானக்கடை வைத்து, யாருக்கு என்ன நேர்ந்தாலும், சாராய விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே முக்கியம் என்ற ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது திமுக அரசு.
குடியிருப்புப் பகுதிகளின் அருகில் எதற்கு மதுபானக் கடைகளை நடத்துகிறது திமுக அரசு? உங்கள் கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.