ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும், அது பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்குத் தலைவணங்குவதாகக் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய இறையாண்மையின் அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், நமது ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்புக்காகவே இருந்ததாகத் தெளிவுபடுத்தினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய 9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால்,100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய ராஜ்நாத்சிங், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப ரீதியாகவும், ராணுவ பலம் ரீதியாகவும் இந்தியாவின் வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்குப் பறைசாற்றியதாகக் கூறிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் வலிமையான வான் தடுப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது என்றார்.
மே 10ம் தேதி பாகிஸ்தான் விமானப்படைத் தளத்தை இந்திய ராணுவம் தகர்த்ததை அடுத்து பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டதாகவும், போரை நிறுத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்து இந்தியாவிடம் மன்றாடியதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
எல்லையைக் கைப்பற்றவோ, போரைத் தூண்டுவதற்காகவோ ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படவில்லை என்று கூறிய அவர், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ராணுவத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். இந்தியாவின் நோக்கம் நிறைவேறியதால் யுத்தம் நிறுத்தப்பட்டதே தவிர, எந்தவொரு அழுத்தத்தாலும் நிறுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்தியப் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவதாகக் கூறிய ராஜ்நாத்சிங், ஒருமுறைகூட எத்தனை எதிரி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பவில்லை என்று கவலை தெரிவித்தார். இந்தக் கேள்வி நாட்டின் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்றே எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு இலக்கை நோக்கி நகரும்போது நடக்கும் சிறுசிறு விஷயங்களைப் பெரிதாக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று உறுதிப்படக் கூறினார். 1962ம் ஆண்டு சீனப் போரின்போது பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்களா? என்றுதான் கேள்வி எழுப்பினோமே தவிர, ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டதா என்று கேட்கவில்லை என்று குறிப்பிட்டார்.
1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்ததை வாஜ்பாய் பாராட்டியதாகக் கூறிய ராஜ்நாத்சிங், எத்தனை விமானங்களை இழந்தோம் என்று கேட்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.