கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன் இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. இது இஸ்ரோவின் தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் புவிசார் அரசியல் வெற்றியாகவும் கருதப்படுகிறது. இஸ்ரோவின் இந்த வெற்றியின் பின்னணி பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
1979ஆம் ஆண்டு முதல், கடந்த 46 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 29ம் தேதி ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் -15 ராக்கெட் இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஆகும்.
இந்திய- அமெரிக்கக் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து உள்நாட்டு கிரையோஜெனிக் இயந்திரத்தால் இயக்கப்படும் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2392 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் உலகின் மிக விலை உயர்ந்த செயற்கைக் கோளாகும். சுமார் 11,284 கோடி செலவில் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இது இஸ்ரோவின் ஓராண்டுக்கான மொத்த செலவுக்கு இணையானதாகும்.
இந்தச் செயற்கைக் கோளின் எடை அதிகம் என்பதால், ஜிஎஸ்எல்வி எப் -16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 30 ஆண்டுக்ளுக்கும் மேலாக கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை அமெரிக்கா தீவிரமாகத் தடுத்தது. விண்வெளித் துறையில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் பல தடைகள் விதிக்கப்பட்டன. நாட்டின் மீது இராஜதந்திர அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன. இதற்காக இந்தியா மேற்கொண்ட சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தும் அமெரிக்காவால் சீர்குலைக்கப்பட்டன.
1990களில் விண்வெளித் துறையில் இந்தியா சீராக முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரோ துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனமான PSLV ஐ உருவாக்கியது. இதன் மூலம் 1,750 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். PSLV 800 கிலோமீட்டர் உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய நம்பகமான ராக்கெட் ஆகும்.
PSLV யால் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புவிசார் சுற்றுப்பாதையில் கனமான பேலோடுகளை எடுத்து செல்ல முடியவில்லை. 2,500 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவுக்கு அதிக சக்திவாய்ந்த ராக்கெட் மற்றும்,அதற்கான மேம்பட்ட இன்ஜின் தேவைப்பட்டது.அதுதான் கிரையோஜெனிக் எஞ்சின்.
கிரையோஜெனிக் தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே அப்போது வைத்திருந்தன. வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பத்தை வாங்குவது அல்லது உள்நாட்டிலேயே அந்த தொழில் நுட்பத்தை உருவாக்குவது என இரண்டே வழிகள்தாம் இந்தியாவுக்கு இருந்தன.
முதலில் ஜப்பான் முன்வந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. பிறகு அமெரிக்காவின் General Dynamics நிறுவனமும், ஐரோப்பாவின் Arianespace நிறுவனமும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்தன. அதிகமான விலை மற்றும் எந்தவொரு தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் நிராகரிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீண்டகால சுயச்சார்புக்குத் தொழில்நுட்ப பரிமாற்றம் இன்றியமையாதது என்பதால் இதுவும் பேச்சுவார்த்தைகளோடு முடிந்து போனது.
1991-ல் ரஷ்யாவின் Glavkosmos, கிளாவ்கோஸ்மோஸுடன் இரண்டு கிரையோஜெனிக் என்ஜின்களை முழு தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் 200 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான வரலாற்று ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
பனிப்போர் முடிவடைந்த நிலையில், பொருளாதார ஆதரவுக்காக மேற்குலகை நோக்கி ரஷ்யா திரும்பியது. அமெரிக்கா ராஜதந்திர அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டில், இஸ்ரோ மற்றும் (Glavkosmos), கிளாவ்கோஸ்மோஸ் மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.அதன் விளைவாக கிளாவ்கோஸ்மோஸுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் முடங்கியது.
ஆனாலும், எந்த வரைபடங்களும், பயிற்சி அல்லது தொழில்நுட்ப பரிமாற்றமும் இல்லாமல் ரஷ்யா ஏழு கிரையோஜெனிக் இன்ஜின்களை வழங்க அனுமதிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்கள், இந்தியாவின் GSLV திட்டத்தின் ஆரம்பகால ராக்கெட்டுகளை அனுப்பப் பயன்படுத்தப் பட்டன. அப்போதைய பிரதமர் PV நரசிம்ம ராவ் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதன் பாதிப்பை உணர்ந்தார். 1994ஆம் ஆண்டு ஏப்ரலில் 300 கோடி ஆரம்ப நிதியில் உள்நாட்டு கிரையோஜெனிக் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
கிளாவ்கோஸ்மோஸில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். உணர்திறன் கூறுகள் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகள் இந்தியாவிற்கு ரகசியமாக அனுப்பப்பட்டன. இந்நிலையில், 1994 ஆம் ஆண்டில், இஸ்ரோவின் கிரையோஜெனிக் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய நம்பி நாராயணன் மற்றும் விஞ்ஞானி சசி குமரனும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் திடீரென கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கிரையோஜெனிக் திட்டம் நின்றுபோனது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது என நிரூபிக்கப்பட்டது.
தொடர்ந்து 2014-ல் இஸ்ரோ 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரித்த கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி GSLV-D5 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. கடந்த 11 ஆண்டுகளாக, இந்தியா கனரக செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த GSLV- யை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் நம்பகமான ஏவுதள சேவையையும் வழங்கி வருகிறது.
ஒரு காலத்தில் உலகம் பகிர்ந்து கொள்ள மறுத்த அதே கிரையோஜெனிக் தொழில்நுட்பம் இந்தியாவின் கையில். இதுதான் சுயசார்பு பாரதம். இது தான் தன்னபிக்கை இந்தியாவின் அடையாளம். அமெரிக்கச் செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இந்தியாவின் GSLV பயன்படுகிறது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.