பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் ஆப்ரேஷன் மஹாதேவ் மூலம் கொல்லப்பட்டதாகவும், இந்தியாவில் இருந்து தீவிரவாதிகள் தப்பிச் செல்ல நமது ராணுவம் அனுமதிக்கவில்லை எனவும் கூறினார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் அடையாளமும், ஆப்ரேஷன் மஹாதேவ் மூலம் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் 100 சதவீதம் ஒத்துப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம், யாரைப் பாதுகாக்க விரும்புகிறார் எனவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளையா? அல்லது லஷ்கர் தீவிரவாத அமைப்பையா? என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில்தான் காங்கிரஸ் கவனம் செலுத்துவதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, நிச்சயம் மீட்டெடுப்போம் என சூளுரைத்தார்.
இந்துக்கள் ஒருபோதும் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை என திட்டவட்டமாக கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகள் ஊடுருவலையும் முடிவுக்குக் கொண்டு வர, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.