கடைமடை பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து 2 மாதங்களாகும் நிலையில், ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர், வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடைய தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி, வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டை கட்டிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.