சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது..
இந்தியா – சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தை அவதூறாகப் பேசியதாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி தரப்பில், இந்தியா எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேசக்கூடாது என்று எப்படி கூற முடியும் என வாதம் முன் வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கலாம். மாறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்களே?.. இப்படிச் செய்யலாமா? எனவும் வினவினர்.
நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இப்படி கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்றும், உண்மையான இந்தியராக இருந்தால் இப்படிப் பேச மாட்டீர்கள் எனவும் சாடினர்.
ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாதீர்கள் என அறிவுறுத்திய நீதிபதிகள், 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
ஒரு உண்மையான இந்தியர், எல்லை தொடர்பான விவகாரத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசமாட்டார் எனக்கூறிய நீதிபதிகள், கருத்துச் சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது எனவும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.