இந்தியா மீது 50 சதவிகிதம் வரை அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகத் தம்பட்டம் அடித்துவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரையும் நிறுத்தப்போவதாகக் கூறி வந்தார். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினோ, அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை சட்டை செய்யாமல், உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தினார்.
ஒரு பக்கம் நோபல் பரிசுக்கு நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும் டிரம்புக்கு, பொருளாதார தடைகளைத் தாண்டியும் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்வது எரிச்சலை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்குவதைத் தடுக்க, கடந்த ஜூலை 30ம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதித்தார் டிரம்ப்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்த டிரம்ப், இந்தியா மீது மேலும் 25 சதவிகிதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்கச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவிகிதமாக அதிகரித்தது.
அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறிய மத்திய அரசு, தேச நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்வினையாற்றியது. இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தி விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று உறுதிப்படக் கூறினார். அதற்காக எந்த விலையையும் இந்தியா கொடுக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில், சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பதில் அளித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவை விட சீனா அதிகளவில் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் நிலையில், சீனா மீதான வரிவிதிக்கும் நடவடிக்கையில் தோற்றுப் போன டிரம்ப், இந்தியாவை நோக்கியே காய்களை நகர்த்தி வருவது சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் கணிசமான வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் முதலான தொழில் பிரிவுகளில் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பு, அமெரிக்க நுகர்வோர்கள் அளவிற்கு, இந்தியர்களிடம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பை முறியடித்து, பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் நடந்தபோது, இருநாடுகளும் மாறிமாறி கணிசமான வரி உயர்வை அறிவித்தன. அப்போது சீனாவில் இருந்த என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹூவாங், பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்ற தொழில் அதிபர்கள் சீனாவுக்கு ஆதராக குரல் கொடுத்தனர்.
அதேபோன்றதொரு நடவடிக்கையை இந்தியா கையாளலாம். மைக்ரோசாப்ட், கூகுள், அடோப் தலைமை செயல் அதிகாரிகள் மூலமும், அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளி அரசியல்வாதிகளிடமும் வரிவிதிப்பு பிரச்சனையைப் பேசி, தீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
ரஷ்யா அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நிலையில், பிரேசில், சீனா மீதும் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளார். இந்த சூழலைச் சாதகமாக்க, டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளைத் தவிடுபொடியாக்கும் திட்டத்தை வகுக்க, பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படலாம். ஏற்கனவே இதுதொடர்பான பிரச்சனையைக் கையில் எடுத்துள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, பிரதமர் மோடியிடம் மட்டுமல்லாமல் சீன அதிபருடன் விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இது இந்தியாவுக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைப்பதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் போட முடியுமா என்பதை இந்தியா பரிசீலிக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதுதவிர, சீனா போன்று அமெரிக்காவுக்குப் பதிலடியாக இந்தியாவும் வரியை உயர்த்தலாம். ஆனால், இந்த நடவடிக்கை அமெரிக்கச் சந்தைகளில் சீனா போன்று பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்குத் தேவையான அரிதான தாதுக்களை சீனா ஏற்றுமதி செய்வதே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள சீனா, வரி விதிப்பை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்வதாக விமர்சித்துள்ளது. அதே நேரத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
எனினும், அமெரிக்க வரி விதிப்புகளில் இருந்து ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க, இந்தியா சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. புதிய விரிவான உத்திகளுடன் கூடிய இந்த ஏற்றுமதி திட்டங்கள் இன்னும் சில வாரங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியில் ‘பிராண்ட் இந்தியா’ என்ற பெயரில், ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, இந்தியத் தொழில் துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.