இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தாததால் இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இது மிகவும் அதிகப்படியான வரியாகக் கருதப்படுகிறது. இந்த வரிவிதிப்பு இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக கூட்டாளியே அமெரிக்காதான். அமெரிக்காவிடம் இருந்துதான் இந்தியா அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
2023ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவுடன் 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா வர்த்தகம் செய்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய், ரசாயனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிகளவில் வாங்கியுள்ளது. அதே சமயம், நகைகள், ஜவுளி பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை இந்தியா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. 2023ம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சீன பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீனாவிடம் இருந்தும் ரசாயனங்கள், மின்னணு பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, தாதுப் பொருட்கள், பருத்தி, கடல் பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வகிக்கிறது. இதற்கும் அடுத்த இடத்தில்தான் ரஷ்யா உள்ளது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் தவிர்த்து, வைரம், உரம், ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. பதிலுக்கு, தேயிலை, மசாலா பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த பட்டியலில் 5ஆவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.
இப்படி, தன்னிடம் இருந்து அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்து, சுமுக வர்த்தக உறவு கொண்டுள்ள ஒரு நாட்டிற்குதான் அமெரிக்கா தற்போது 50 சதவீதம் வரி விதித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களை இந்தியா தவிர்க்கத் தொடங்கினால், அந்நாட்டின் வருவாய் கணிசமாகக் குறையும் சூழல் ஏற்படும். இது குறித்து எல்லாம் அறிந்துதான் டிரம்ப் இந்தியாவுக்கு அதிக வரி விதித்துள்ளாரா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.