இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நகைக்கடைகளில் விதவிதமான நகைகளையும், துணிக்கடைகளில் பல ரகங்களில் துணிகளையும் அணிந்திருக்கும் மார்பளவு உருவ பொம்மைகளைப் பார்த்திருப்போம். பிளாஸ்டிக் அல்லது நைலான் பொருட்களால் செய்யப்பட்ட அந்த உருவ பொம்மைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது என்பதோடு அவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக துணிக்கழிவுகளை பயன்படுத்திப் பல வடிவங்களில் மேனிக்வின் உருவ பொம்மைகளைத் தயாரித்து வருகிறது திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம்.
திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் துணிக்கழிவுகளை சேகரித்து அதிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கிய இந்த தனியார் நிறுவனம், படிப்படியாகப் பல வண்ணங்களில் அவற்றைத் தயாரித்ததோடு அதன் மூலமாக இந்த உருவ பொம்மைகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
துணிக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் மறுசுழற்சிக்கு உகந்தது என்பதோடு, மண்ணில் போட்டாலும் மூன்று மாதத்திற்குள் மக்கி மண்ணாகிவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தனது ஏற்றுமதியைச் செய்து வருகிறது
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த மேனிக்வின் வகை உருவ பொம்மைகள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் என இன்னும் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.