தமிழ்நாட்டில் இந்த இரட்டையர்களின்றி எந்த மாராத்தான் ஓட்டப்பந்தயமும் நடைபெறாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விதமான ஓட்டப்பந்தயங்களிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர் சிவகங்கையைச் சேர்ந்த இரட்டையர்கள். சாதிக்கப் பிறந்த இரட்டையர்கள் குறித்தும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களின் பெற்றோர்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வரும் ராஜேஷ் – ராமாமிர்தம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் தான் இந்த பிரனேஷ் மற்றும் பிரதீஷ். சிறு வயதிலிருந்தே ஓட்டப்பந்தயம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இரட்டையர்களுக்கு அவர்களது பெற்றோர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். முதன்முதலாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடத் தொடங்கிய 7 வயதான இரட்டையர்கள், பின்னாளில் எங்கு மாரத்தான் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வருகின்றனர்.
இதுவரை 64 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றிருக்கும் இந்த இரட்டையர்களின் அடுத்த மாரத்தான் இலக்கு 40 கிலோமீட்டர் தூரமாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாள்தோறும் அறுபது கிலோ மீட்டர் என சென்னை வள்ளுவர்கோட்டம் வரையிலான 707 கிலோ மீட்டர் தூரத்தை 12 தினங்களில் கடந்து சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இந்த இரட்டையர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1500 பல்டிகள் அடித்துக் கொண்டே செல்வதற்கான பயிற்சியில் இரட்டையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாராத்தான் மட்டுமின்றி யோகாசனம் செய்வதிலும் இரட்டையர்கள் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
இரட்டையர்களின் முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும், வெற்றிக்கும் பின்னணியில் அவர்களது பெற்றோர்களின் அளப்பரிய பங்களிப்பு இன்றியமையாததாகத் திகழ்கிறது. மூன்று வயதில் ஓடத் தொடங்கிய இரட்டையர்களின் பயணம் ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற இலக்கை அடையும் வரை ஓயாமல் பயணிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.