இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்களால் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக உருக்குலைந்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்புகள் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மாபெரும் இயற்கை சீற்றமாக மாறியது. குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட 36 மேக வெடிப்புகள், 74 திடீர் வெள்ளம் மற்றும் 63 நிலச்சரிவுகள், 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதோடு, அங்குள்ள உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட 16 மேக வெடிப்புகள் ஏற்பட்டு அங்குப் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்த இயற்கை சீற்றத்தால் அம்மாநிலத்தில் இதுவரை 35 பேர் வரை உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரழிவின் மையமாக உள்ள மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மேக வெடிப்பாலும், 18 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அண்மையில் குல்லு மற்றும் மண்டி மாவட்டத்தின் மாணிகரன் பகுதியிலும் திடீர் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவு பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. மாநில அரசின் மதிப்பீட்டின் படி இதுவரை ஏற்பட்ட இழப்பின் அளவு 2 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் தொடர் மழைப்பொழிவு நிலவி வருவதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துமீறிய கட்டுமானங்கள், காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவையே இந்த இயற்கை சீற்றங்கள் வேகமாகவும், அடிக்கடியும் ஏற்படக் காரணமாக இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதியான இமாச்சலில், நான்கு வழிச்சாலை பணிகள், சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற பணிகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தை ஏற்படுத்துவதாகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான ஓ.பி.புரைட்டா எடுத்துரைத்திருக்கிறார்.
கடல்கள் சூடாவதாலும், அதிகரிக்கும் காற்றின் வெப்பநிலையாலும், இனி வருங்காலங்களில் மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌம்யா தத்தா எச்சரித்திருக்கிறார். இயற்கையுடனான மனித தலையீட்டைக் குறைப்பதே இந்த பேரழிவுகளைத் தடுக்க ஒரே வழி என்றும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
சுற்றுச்சூழல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில், கட்டுப்பாடற்ற வளர்ச்சி எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை, இந்த பேரழிவு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.