இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, அமெரிக்க பொருளதார நிபுணர்கள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
இந்தியா மீது அதிகப்படியான வரி விதித்த ட்ரம்பின் நடவடிக்கை தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. முதலில் இந்தியாவை சேர்ந்த நிபுணர்கள் ட்ரம்பின் முடிவு ஏன் தவறானது என்பது குறித்து விளக்கமளித்தனர். அடுத்ததாக, பல்வேறு நாட்டு பொருளாதார நிபுணர்கள் இந்த வரிவிதிப்பின் அபத்தத்தை சுட்டிக்காட்டினர். தற்போது அமெரிக்காவில் உள்ளவர்களே ட்ரம்புக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபலமான பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs). இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பு அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இதுவரை மேற்கொள்ளப்படாத முட்டாள் தனமான நடவடிக்கை என விமர்சித்திருந்தார். இனி அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற மனநிலையை இந்தியர்கள் அடைந்திருப்பார்கள் எனவும், இந்தியாவுடனான உறவுக்கு ஒரே இரவில் டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதே கருத்தைதான், ட்ரம்பின் முன்னாள் ஆலோசகரான ஜான் போல்டனும் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்கு வரி விதித்தது, இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவிற்கு நெருக்கமாக மாற்றும் என கூறினார். இந்தியாவை தனது பக்கம் ஈர்க்க இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளும் இந்த வரியால் சிதைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நிபுணரான கிறிஸ்டோபர் படில்லா உள்ளிட்ட பலரும் இப்படி ட்ரம்பின் முடிவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது, அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் ஆலோசகரான ஸ்டீவ் ஹான்கேவும் இணைந்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், காலையில் மோடியுடன் கைக்குலுக்கிவிட்டு, இரவில் அவரது முதுகில் குத்தக்கூடியவர் ட்ரம்ப் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரம் சிக்கலை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் என எச்சரித்துள்ளார்.
தனது எதிரி தன்னை தானே அழித்துக்கொள்ளும்போது நாம் அதில் தலையிட கூடாது என மாவீரன் நெப்போலியன் கூறியுள்ளார். அந்த கூற்றுக்கு உதாரணமாக ட்ரம்பின் நடவடிக்கை இருப்பதாக ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.