எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலன்களுக்கு பாஜக அரசு ஒருபோதும் தீங்கு வர விடாது என உறுதியளித்தார்.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகளை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என கூறினார். இந்தியாவின் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களே மிக முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், வரவிருக்கும் பண்டிகைகள் சுயசார்பு கொண்டாட்டங்களாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி, சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைகள், நாட்டின் முன்னேற்றத்தையும், செழிப்பையும் ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் எனவும் கூறினார்.