அமெரிக்கா என்ன அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உக்ரைனையும், ரஷ்யாவைச் சமாதானம் செய்துவைக்கிறேன் என்ற பெயரில், பல்வேறு நாடுகளிடம் வம்பிழுத்து, பகைமைப் பாராட்டி வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்படும் எனக் கூறிய அவர், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரி விதித்தார். அந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
உலகளவில் பிரேசிலுக்கும், இந்தியாவுக்கும் மட்டும்தான் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கெடுபிடிகளுக்கு எல்லாம் இந்தியா அசைந்து கொடுப்பதாக இல்லை. ரஷ்யா மட்டுமல்ல, குறைந்த விலைக்கு யார்க் கச்சா எண்ணெய் கொடுத்தாலும் நாங்கள் வாங்குவோம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களுக்குத் தங்குதடையின்றி எண்ணெய் விநியோகம் செய்வது மட்டும்தான் தங்களின் நோக்கம் எனவும் தெளிவுபடுத்திவிட்டது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தப்போவதில்லை என, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது தெரிவித்துள்ளன. இது குறித்து தனியார் நாளிதழுக்குப் பேட்டியளித்த அதன் அதிகாரிகள், தங்களுக்கு முதலில் நாடுதான் முக்கியம் எனவும், வர்த்தகம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் எனவும் கூறியுள்ளனர்.
அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு வலுவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தும்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இது குறித்து பேசிய நிர்வாகிகள், கடந்தாண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்-க்கு இரண்டரை முதல் 3 டாலர்கள் வரை ரஷ்யா தள்ளுபடி அளித்திருந்ததாகவும், அது தற்போது ஒன்றரை டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே தங்களுக்கான ஆர்டர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கும் என நம்புவதாகவும் கூறினர். தற்காலிகமான பொருளாதாரச் சிரமங்களை காட்டிலும், அரசின் நடவடிக்கைக்குத் துணை நிற்பதே முக்கியம் எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர்ப் பியூஷ் கோயல் உள்ளிட்டோர், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்படி இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்று வருகின்றன.