இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கனமழை மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்டவைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணம் என்ன? வருங்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகக் கொட்டித் தீர்த்த கனமழையும், மேக வெடிப்புகளும் பெரும் வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள் உரிய மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜம்முவில் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்புகள் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவை ஏற்பட்டுத்தி சுமார் 30 பேரைப் பலிவாங்கியது. குறிப்பாகத் தவீ, செனாப் மற்றும் பசந்தர் உள்ளிட்ட உள்ளிட்ட ஆறுகளில் எச்சரிக்கை அளவை மீறி வெள்ளம் கரைபுரண்டதால், தாழ்வான பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற வட மாநிலங்களில், வெளுத்து வாங்கிய கனமழைப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு முக்கிய சாலைகள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தின.
பாகிஸ்தானின் கைபர்ப் பக்துன்க்வா, கில்கித்-பல்திஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வடக்கு மாகாணங்கள் கனமழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்புகளால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப் பாதிப்புகள் ஒருசில பகுதிகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேபோல, சீனாவில் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கனமழைப் பல்வேறு மாகாணங்களில் பெரும் சேதங்களை விளைவித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிய வெள்ளப் பாதிப்புகளால், இதுவரை 1.84 லட்சம் கோடி அள்வுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் பருவமழைக் காலங்களின்போது வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றாலும், இந்த ஆண்டு மழையின் அளவும் அதன் தீவிரமும் வெகுவாக அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக வெப்பநிலை உயர்வால் பருவமழையின் தடம் தெற்கு திசைக்கு நகர்ந்ததால், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரித்து, வடகிழக்கு மாநிலங்களில் மழை அளவைக் குறைத்துள்ளன.
மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஆவியாதல் அதிகரிக்கிறது. இது மேகங்களில் அதிகளவு நீர்த்துளிகளைக் குவித்து திடீர்க் கனமழை மற்றும் மேக வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதேபோல நீர்நிலைகளின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பதும் அதிக ஆவியாதலை ஏற்படுத்தி மழைப்பொழிவை அதிகரிக்கின்றன. குறுகிய காலத்தில் பெய்யும் இதுபோன்ற அதீத மழைக் காரணமாக மக்களின் உயிர்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன.
காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், வனங்கள் அழிப்பு உள்ளிட்டவை பருவமழை வடிவங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதிகக் காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் இருந்து குறைந்த காற்றழுத்தம் கொண்ட பகுதிகளுக்குக் காற்று நகர்வதால் அப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழைப்பதிவு ஏற்படுகிறது. இதுவே இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெற காரணமாக அமைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய பருவமழைச் சுழற்சியில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவது புதிதல்ல என்றாலும் மோசமான நீர் மேலாண்மை அதன் தீவிரத்தை அதிகரித்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. முறையாக எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை மீட்டமைத்தல், நிலையான திட்டமிடல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவையே, வருங்காலங்களில் வெள்ளப் பேரழிவின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.