அமெரிக்காவின் H-1B, GREEN CARD மற்றும் STUDENT AND EXCHANGE விசாக்களில், அந்நாட்டு அரசு பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அந்த மாற்றங்கள் என்னென்ன? அது இந்தியர்களிடையே எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடியேற்ற விசா முறையில் பெரும் மாற்றங்கள் வர உள்ளன. அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், H-1B என்ற வேலைவாய்ப்பு விசா, நிரந்தரக் குடியேற்றத்திற்கான கிரீன் கார்டு முறை, மாணவர் மற்றும் பரிமாற்ற விசா ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட மாற்றங்களுடன் புதுப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வேலை வாய்ப்புகளில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கி, வெளிநாட்டுக் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக H-1B வேலைவாய்ப்பு விசாவில் தற்போது நடைமுறையில் உள்ள லாட்டரி முறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதில் ஊதியம் அடிப்படையிலான முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி அதிக ஊதியம் பெறும், அதிகத் திறனுடைய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நடுத்தர ஊழியர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போதைய H-1B விசாக்களில் சுமார் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுவதால், இந்த மாற்றம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் பெரிய சவாலை முன்னிறுத்தியுள்ளது.
கிரீன் கார்டு முறையிலும் தற்போதைய வருமான அடிப்படையிலான குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் விமர்சித்து வருகிறது. அதன்படி புதிய GOLD CARD திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நபர்களுக்கு நேரடியாக நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குடும்பம் மற்றும் வேலை அடிப்படையிலான குடியேற்றத்தைக் குறைத்து, முதலீடு மற்றும் திறமை அடிப்படையிலான குடியேற்றத்தை முன்னிலைப்படுத்தும் என டிரம்ப் நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மாணவர் மற்றும் பரிமாற்ற விசாக்கள் (STUDENT AND EXCHANGE VISA) வழங்குவதிலும் அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாணவர் மற்றும் பரிமாற்ற விசாக்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரைக் கால வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஊடக விசாக்களுக்கான கால அவகாசம் 240 நாட்களாகக் குறைக்கப்படுவதுடன், சீனப் பத்திரிகையாளர்களுக்கு வெறும் 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்தக் கால வரம்பைத் தீவிர கண்காணிப்பின் கீழ், அவர்கள் நீட்டித்துக்கொள்ள முடியும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா விவகாரத்தில் அமெரிக்க அரசின் இந்த மாற்றங்கள் இந்தியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். H-1B வேலைவாய்ப்பு விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களைப் பெறும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அந்த வகையில் ஊதியம் அடிப்படையிலான விதிகள் அமெரிக்க நிறுவனங்களை, இந்தியாவில் கிளை அலுவலகங்கள் தொடங்கவோ அல்லது தொலைதூர வேலை முறையை அதிகரிக்கவோ தூண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மாணவர் விசா காலவரம்பு அவர்களுக்கு அதிகச் சிக்கல்களை உருவாக்கும் எனவும், நிரந்தரக் குடியேற்ற பாதைகள் குறுகுவதால், பல தொழில்முனைவோரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசு மேற்கொள்ளவுள்ள இந்த மாற்றங்கள் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக்குவதோடு, உலகளாவிய திறமைசாலிகளை ஈர்க்கும் மையம் என்ற அந்தஸ்தையும் அமெரிக்காவிடம் இருந்து பறிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.