நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் மழை கொட்டித் தீர்த்தது. அத்திக்குன்னா, சேலக்குன்னா, தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பந்தலூர் பகுதியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே வாழவயல் பகுதியில் சின்னத்தம்பி என்பவரின் வீடு மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இடர்பாடுகளில் சிக்கிய சந்திரிகா என்பவர் படுகாயங்களுடன் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.