அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் ஷிகேரு இஷிபா மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் இஷிபா முன்னிலையில் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்ட கூட்டத்திலும், பிரதமர் மோடி கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் இஷிபா முன்னிலையில் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மற்றும் ஏஐ துறையின் வளர்ச்சியே நமது முக்கிய குறிக்கோளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், வலிமையான ஜனநாயக நாடுகள் அனைத்தும் இயற்கையான கூட்டாளிகள் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதாரக் கூட்டாளியாக ஜப்பான் இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் கலாச்சாரச் சின்னமான DHARUMA பொம்மைப் பரிசாக வழங்கப்பட்டது.
ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் பிரதமர் மோடிக்கு DHARUMA பொம்மையைப் பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கப்பட்ட DHARUMA பொம்மை இருநாட்டின் நட்புறவுக்கு அடையாளமாக விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.