இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு மட்டும் அடிபணிந்து நடக்கக் காரணம் என்ன? இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்…
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, இந்திய மருந்துகளுக்கு மட்டும் உடனடி சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மலிவான சுகாதாரச் சேவைகளை வழங்கும், முக்கிய generic medicine எனப்படும் பொதுமருந்துகள் கிடைப்பது பாதிக்கப்படவில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொதுமருந்துகள் அமெரிக்கச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால், இந்திய மருந்துகள் அமெரிக்க MEDI CARE திட்டத்திற்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவற்றுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க மருத்துவ சேவைகளின் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு, அமெரிக்கா எந்தெந்த நாடுகளிலிருந்து மருந்துகளை அதிகமாக இறக்குமதி செய்கிறது எனப் பார்த்தால், முக்கியமாக இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து அமெரிக்கா 12 ஆயிரத்து 471 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்துள்ளது.
இது அந்நாட்டின் மருந்து இறக்குமதியில் 5.9 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு இது 11.9 சதவீத வளர்ச்சி எனப் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்திலிருந்து 18 ஆயிரத்து 858 மில்லியன் டாலர், ஜெர்மனியிலிருந்து 17 ஆயிரத்து 164 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்திருந்தது.
இந்தியா தனது மருந்துகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக நடப்பாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 9 ஆயிரத்து 784 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இது இந்தியாவின் மொத்த மருந்து இருப்பில் 39.8 சதவீதம் ஆகும். அதேபோல, இங்கிலாந்திற்கு 781 மில்லியன் டாலருக்கும், தென் ஆப்ரிக்காவிற்கு 637 மில்லியன் டாலருக்கும், பிரான்ஸுக்கு 586 மில்லியன் டாலருக்கும், கனடாவிற்கு 540 மில்லியன் டாலருக்கும் இந்தியா மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய மருந்துகளின் முக்கியத்துவத்தையும், அமெரிக்கா அதனை எந்த அளவிற்கு நம்பியுள்ளது என்பதையும் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா வழங்கிய சுங்க வரி விலக்கு காரணமாக, முக்கிய இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்குகளை பாதுகாக்க முடிந்துள்ளது.
ஒருவேளைப் பொது மருந்துகளுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டிருந்தால், மருந்து நிறுவனங்களிடையே விலைப் போட்டி அதிகரித்து, சந்தையில் போட்டித்திறன் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.