இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா நவீன ஆயுதங்கள் வாங்குவதை விரும்பாத அமெரிக்கா பல்வேறு காலகட்டங்களில் தடைக்கல்லாக நின்றிருக்கிறது. இது ஒருவகையில் இந்திய பாதுகாப்புத்துறையைத் தற்சார்பு நிலை நோக்கி நகர்த்தவும் வழிவகுத்தது. நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி கச்சா எண்ணெய் மற்றும் நவீன ஆயுதங்களை இந்தியா மலிவான விலையில் வாங்குவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எரிச்சலூட்டியது. இதுதான் இந்தியாவின் மீதான வரி விதிப்புக்குக் காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
1990 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் இரண்டு போர் ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தது இந்தியா… கார்கில் போருக்குப் பின்னர் பாகிஸ்தான் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தபோது, திபெத் எல்லையில் சீனா கட்டுமானத்தைத் தொடங்கியது. அந்தச் சூழ்நிலையில் இறையாண்மையைக் காக்க, நவீன ஆயுதங்களின் தேவையை உணர்ந்தது இந்தியா.
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த பாலிஸ்டிக் ஏவுகணைகள், இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்தன. இந்தியாவின் வான்பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த மத்திய அரசு, இஸ்ரேல் உருவாக்கிய ஆரோ-2 என்ற அதிநவீன வான்பாதுகாப்பை வாங்க முனைப்பு காட்டியது.
300 கிலோ மீட்டர் வரையிலான குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுட்டும் வீழ்த்தும் திறன் கொண்ட ஆரோ-2 அந்தச் சமயத்தில் மிகச் சிறந்த வான்பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரைப் பெற்றிருந்தது. இது தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியா, அதனை வாங்க தயாராக இருந்தபோது சிவ பூஜையில் கரடி புகுந்த கதையாகக் குறுக்கிட்டது அமெரிக்கா.
ஆரோ-2- வான் பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் உருவாக்கியிருந்தது. இந்தச் சூழலில், ஆரோ-2-ஐ இந்தியாவுக்கு வழங்கும் வகையில், இஸ்ரேல் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், இதை விரும்பாத அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்தியது..
Missile Technology Control Region (MTCR)-ல் இந்தியா உறுப்பினராக இல்லாத நிலையில், இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான ஆரோ-2 வான் பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை ஊக்குவிக்கும் என்று சப்பைக் கட்டு கட்டியது அமெரிக்கா. 2002 ஆம் ஆண்டு, இறுதியாக இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா தடுத்தது.
இது இந்தியாவுக்குப் பின்னடைவாக இருந்தபோதிலும், ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி இந்தியா தள்ளக் காரணமாய் அமைந்தது. வெகுண்டு எழுந்த இந்தியா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வேகத்தை அதிகப்படுத்தியது. Indian Ballistic Missile Defence Programme (BMD) என்ற திட்டத்தைத் தொடங்கிய இந்தியா, முதற்கட்டமாகப் பிருத்வி வான் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை இடைமறிப்பான்களை உருவாக்கியது. முதல் பரிசோதனையிலேயே வெற்றிகரமாகச் செயல்பட்ட இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அமெரிக்காவின் கண்களை விரிவடைய செய்தது.
அதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டுக்குப் பின்னர், இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட, Air Defence-1 மற்றும் Air Defence-2 ஆகியவற்றை உருவாக்குவதில் முனைப்பு காட்டியது.
அதன் பலனாக, 5000 கிலோ மீட்டர்ச் சுற்றளவில் ஏவுகணைகளை இடைமறிக்கும் Air Defence-1 2022ம் ஆண்டு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதே நேரத்தில் Air Defence-2 3000 முதல் 5500 கிலோ மீட்டர் வரம்பில் இலக்குகளைத் தாக்கி அழித்தது. இந்த இரட்டை அடுக்கு கேடயமான வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்தியாவின் வான் பாதுகாப்பை உறுதி செய்தது. பின்னர் உள்நாட்டு ஏவுகணைப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி வரும் இந்தியா, சுதர்சன சக்கர வான் கவசத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது….
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மேம்பட்ட ஆயுதங்கள் வாங்குவதை விரும்பாத அமெரிக்கா, ஃபால்கன் வான் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பையும் வழங்க மறுத்தது. இந்தியாவுக்கு ஆயுதங்களை மறுப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு உதவும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு தற்போது அம்பலப்பட்டுள்ளது.