இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்தியா – சீனா இடையேயான வர்த்தகம் பல ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இருப்பினும், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக இடைவெளி சீனாவுக்குச் சாதகமாக இருக்கும் நிலையில், சார்புநிலையை நோக்கி நகரும் இந்தியா, ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 29ம் தேதியன்று, உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்ப் பிரதமர் மோடி. அவரது பேச்சு இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான அச்சாரமாக மாறியிருக்கிறது.
அண்மையில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 2025-26 ஏப்ரல்-ஜூலைக் காலகட்டத்தில், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 19.97 சதவிகிதம் அதிகரித்து, 50 ஆயிரம் கோடியாகவும், இறக்குமதி 13.06 சதவிகிதம் அதிகரித்து மூன்று லட்சத்து 49 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. 2024-25 நிதியாண்டில், இந்தியா ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
அதே நேரத்தில் இறக்குமதி 9 லட்சத்து 76 ஆயிரத்து 100 கோடியாக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2003-04-ம் ஆண்டில் 94 ஆயிரத்து 600 கோடியாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024-25-ல் 8 லட்சத்து 53 ஆயிரத்து 120 கோடியாக அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் சீனா சுமார் 35 சதவிகிதத்தைக் கொண்டிருந்ததாகவும், இது கடந்த நிதியாண்டில் 24 லட்சத்து 33 ஆயிரத்து 800 கோடியாக இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை மிகப்பெரிய இடைவெளியில் இருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சீனாவில் இருந்து மருந்துகள், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமான பொருட்கள், புதுபபிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர்ப் பொருட்களை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்வதே இதற்குக் காரணம் என GTRI அறிக்கைக் கூறுகிறது.
இந்தியாவின் தேவைகளில் 75 சதவிகிதத்தைச் சீனா பூர்த்தி செய்வதாகவும் அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது. எரித்ரோமைசின் ஆண்டிபயோடிக் மருந்துகள் 97.7 சதவிகிதம் சீனாவில் இருந்தே பெறப்படுகிறது. Silicon wafers, Flat panel displays, Solar cells, Lithium-ion batteries, Laptops, Embroidery machinery, Viscose yarn போன்றவை 75 சதவிகிதத்தில் இருந்து 98 சதவிகிதம் வரைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 42.3 சதவிகிதம் என்ற அளவுக்கு இருந்த நிலையில், தற்போது 11.2 சதவிகிதம் குறைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள், உள்நாட்டு நுகர்வுக்கு மட்டுமல்லாமல் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெளிவுபடுத்துகிறது.இது உள்நாட்டு விநியோகத்திற்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியைப் பிரதிபலிக்கிறது.
சீன இறக்குமதியை மட்டும் சார்ந்திருப்பதைக் கட்டுப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 14-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தரமற்ற பொருட்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்க கடுமையான தர நிலைகள், சோதனை நெறிமுறைகள், கட்டாயச் சான்றிதழ் போன்ற முறைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
தற்போது விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்தவும், ஒருசார்பு நிலையைக் குறைக்கவும், மாற்று விநியோகஸ்தர்களை ஆராயவும் இந்திய வணிகர்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி இறக்குமதி நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன.
மேலும், நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிரான வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பரிந்துரைக்கவும், வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் முதல் பொறியியல் பொருட்கள் வரைச் சீன இறக்குமதி பொருட்கள் சந்தையில் குவிவதைத் தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும், மத்திய அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் சீனா உடனான நல்லுறவைப் பேண முடிவு செய்துவிட்ட இந்தியா, சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.