சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபருடனும்,ரஷ்ய அதிபருடனும் நெருக்கமான அன்பை உறுதிப்படுத்திய நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இது உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுகிறதா ? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐந்தாவது முறையாகச் சீனா நடத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்றது. 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இது எஸ்சிஓவின் வரலாற்றில் ‘இதுவரை இல்லாத மிகப்பெரிய’ உச்சி மாநாடு என்று கூறப்படுகிறது.
முதல் நாளில், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் கலந்து கொண்ட தலைவர்களுக்கு விருந்து வைத்தனர், அதைத் தொடர்ந்து வழக்கமான பாரம்பரிய புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி முன் வரிசையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நின்றார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டது இதுவே முதல் முறை யாகும். முன் வரிசையில் இருந்தாலும், இருவருக்கும் இடையே, குறைந்தது எட்டு பேர் இருந்தனர்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர்க் கைகுலுக்கி மூவரும் இயல்பாக உரையாடுவதையும், அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மூவரையும் கடந்து செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
SCO உச்சிமாநாட்டின் போது அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜி ஜின்பிங்-க்குடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பிரதமர் ம்,மோடி பதிவிட்டுள்ளார். இது மூன்று தலைவர்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.
முன்னதாக, பாரம்பரிய புகைப்பட அமர்வுக்குப் பிறகு, பின்னால் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், திடீரென ரஷ்ய அதிபர் புதினுடன், கைகுலுக்குவதற்கு ஓடி வருவதையும், சீன அதிபர்,அவரைக் கண்டும் காணாமல் தவிர்த்து விட்டு நடப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.
இது சர்வதேச தலைவர்கள் இருக்கும் மேடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் ஓரம் கட்டப்பட்டதையே காட்டுகிறது. பரிதாபமாகக் கவனத்தைத் தேடும் பாகிஸ்தான் பிரதமரின் நடத்தையைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் அவரைக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே 2022-ல் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தனது ஹெட்ஃபோன்களைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது ? எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் சிரமப்பட்டதையும், எதிரில் இருந்த ரஷ்ய அதிபர் புதின் இதைப் பார்த்து சிரிப்பதையும் உலகம் பார்த்திருக்கிறது.
துருக்கி அதிபர் எர்டோகன், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி,பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கவில்லை. பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரைப் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதால், இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய- சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இருநாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைத் தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதால், இச்சவாலுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்று பிரதமர் மோடி, குறிப்பிட்டுள்ளார். எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை அழிப்பதில், சீனத் தரப்பிடம் இருந்தும் நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றதாக, மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்த பட்டுள்ளது.
முன்னதாக, இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையில் எந்த வகையான இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.