ரஷ்யக் கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கக் கூடாது என்றும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, பிறநாடுகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் இந்தியா பெரும் இலாபம் ஈட்டுவதோடு, உக்ரைன் போரையும் தூண்டுகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு… டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை வாங்கிய இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்பட்டது என்பது டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் வாதம்.. அமெரிக்க வரி விதிப்பை நியாயமற்றது என்று கூறிய இந்தியா, மலிவான எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கே தொடர்ந்து வாங்குவோம் என்றும் திட்டவட்டமாகக் கூறியது.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்யா-உக்ரைன் போர் உண்மையில் “மோடியின் போர்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தற்போதோ இந்தியாவை ரஷ்யாவின் சலவைக்கூடம் என்றும், இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள், இதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் பேசியிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அவரது கருத்துக்களுக்கு இரண்டு முக்கிய அமெரிக்க வல்லுநர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர்.
சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கக் கூடாது என்று கூறியுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் டெரெக் ஜே.கிராஸ்மேன், நவரோவைக் கண்டித்துள்ளார். தெற்கு ஆசியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் துணை உதவி செயலாளர் இவான் ஃபைகன்பாம், நவரோவின் பேச்சில் ஒழுக்கம் இல்லை என்று விமர்சித்துள்ளார். ஒழுக்கம் குறித்த பாடத்தை நவரோவுக்கு வழங்க வேண்டிய தருணம் இது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
நவரோவின் பேச்சு தவறானது, உணர்ச்சியற்றது என்று பாஜக எம்.பி., தினேஷ் சர்மா விமர்சித்துள்ளார். இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவும் நவரோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
ஆனால், பிராமின்ஸ் என்று நவரோ குறிப்பிட்ட வார்த்தை உண்மையில் பிராமணர்களைக் குறிப்பிடவில்லை என்றும், பெரும் பணக்காரர்களையே குறிக்கிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சகரிகா கோஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்கா புதிய இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களைக் குறிப்பிட பாஸ்டன் பிராமின் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதையும் அவர்க் குறிப்பிட்டார். இந்தியா தொடர்புடைய கருத்து என்பதால் பலரும் பிராமணர்கள் என்று புரிந்து கொண்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.