சென்னைச் சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் நடைபாதையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னைச் சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் 40 வயது மதிக்கத்தக்கத் தீபா என்ற பெண், மழைநீர் வடிகால் நடைபாதையில் அதிகாலை நேரத்தில் நடந்து சென்ற போது, அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
உதவிக்கு யாரும் இல்லாததால் மழைநீர் வடிகாலில் இருந்த நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. தகவல் அறிந்த சூளைமேடு போலீசார், தீபாவின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள், வீரபாண்டியன் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளைச் சரியாக செய்யாமல், மட்டைப் பலகையைப் போட்டு தற்காலிகமாக மூடியது தெரியவந்தது.
அந்த மட்டைப் பலகை மீது கால்வைத்த தீபா, பலகை உடைந்து மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிர் பலி வாங்கிய பள்ளம் அந்தப் பகுதியில் ஒரு மாதமாக மூடப்படாமல் கிடந்ததாகவும், தற்போது கூட சென்னை மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.