கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ஓணம் விழா கொண்டாட்டம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம் .
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்றால் ஓணம் பண்டிகைத் தான். மலையாள நாள்காட்டி படி அத்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சித்திரம் வரை ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
மகாவலி நாட்டின் மன்னனான மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு முதல் அடியைப் பூமியிலும், அடுத்த அடியை ஆகாயத்திலும் அளந்தார். அடுத்த அடி அளக்க இடம் இல்லாததால் மகாபலி மன்னர்த் தனது தலையைக் காட்டினார்.
வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, மகாபலி மன்னரின் தலையை அளக்கவே இந்த மண்ணை ஆண்ட தனக்கு ஆண்டில் ஒருமுறை மட்டும் மக்களைப் பார்க்க அனுமதி வேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். அப்படி மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழிப் பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.
ஆற்றூர் தனியார் கல்லூரியில் தார் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து வந்த மகாபலியை மாணவ மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். பின்னர் அத்தப்பூ கோலப் போட்டி, திருவாதிரை நடனப் போட்டி, உறியடி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .
இதே போன்று சுங்கான்கடைப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.கேரளப் பாரம்பரிய உடையணிந்து கலக்கிய மாணவிகள், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்று திருவட்டாறு தனியார் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.