ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்குப் பின்பான வரி குறைப்பு வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
சுதந்திரத் தின உரையில் பிரதமர் மோடி, இந்த ஆண்டு, தீபாவளிக்குள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கும் வகையில் GST 2.0 சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரியை நீக்கிவிட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டுமே பின்பற்ற பரிந்துரை செய்யப்பட்டது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முன்மொழிவை, மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு ஆகஸ்ட் 20 மற்றும் 21ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பைக் குறைக்க வலியுறுத்திய மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
GST 2.0-வில் ஏற்கெனவே 12 சதவீத வரியின் கீழ் இருந்த 99 சதவீதப் பொருட்கள், 5 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீத வரியின் கீழ் இருந்த 90 சதவீதப் பொருட்கள் 18 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பென்சில்,பேனா,ரப்பர், கிரையான்ஸ் உள்ளிட்ட எழுது பொருட்கள், வரைபடங்கள், நோட்டுகள், மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
ரொட்டி மற்றும் பரோட்டா உட்பட அனைத்துப் பாரம்பரிய இந்திய ரொட்டிகளுக்கும், அவற்றின் வகைகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் சாக்லேட்,பேரீச்சம்பழம், நூடுல்ஸ், வெண்ணெய், நெய், பால் பவுடர், வெண்ணெய், condensed milk மற்றும் சோப் ,ஷாம்பு,டூத் பேஸ்ட் ,டூத் பிரஷ்,ஹேர் ஆயில் போன்ற பொருட்களும் தையல் மிஷின் மற்றும் அதன் பாகங்களும் 5 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் உட்பட நொறுக்குத்தீனிகளும், காலணிகளும் துணிமணிகளும் இந்த 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப் பட்டுள்ளன.
விவசாயத் துறையில், ட்ராக்டர் டயர்கள் மற்றும் அதன் பாகங்கள் 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ட்ராக்டர்கள், உயிர்ப்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட சத்துக்கள், சொட்டுநீர்ப்பாசன அமைப்புகள்,உரங்கள் ஆகியவை 12 சதவீத வரி வரம்பில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் தெர்மாமீட்டர், மருத்துவ ஆக்சிஜன், நோயறிதல் KIT, குளுக்கோமீட்டர்,சோதனை அட்டைகள் எனப்படும் MEDICAL STRIPS ஆகியவையும் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப் பட்டுள்ளன. 28 சதவீத வரி அடுக்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால், அதன் கீழ் வந்த அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏசி, டிவி, டிவி மானிட்டர்கள்,புரொஜெக்டர்கள்,செட் அப் பாக்ஸ், வாஷிங் மெஷின், டிஷ் வாஸர், ஃபிரிட்ஜ் , சிறிய வகையிலான கார்கள் மற்றும் குறைந்த இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டதால் அவற்றின் விலைக் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதே நேரத்தில், புகையிலை, குட்கா, பான் மசாலா குளிர்பானங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி 2.0 வரி சீர்திருத்தம். ஒருமனதாக எடுக்கப் பட்டுள்ளது.
பொருட்களுக்கான வரி குறைப்பால் அரசுக்கு 93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 40 சதவீத வரி அடுக்கில் இருந்து அரசுக்கு 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
GST 2.0 சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலைக் கணிசமாக குறையும். மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். மக்களிடையே வாங்கும் சக்தியும் நுகர்வுபழக்கமும் அதிகரிக்கும் என்பதால், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
இந்த வரி குறைப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும், குறிப்பாகச் சிறு வணிகர்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.