உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாகக் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து இருநாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
இதனால் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப், ரஷ்யா மீது தன்னைவிட யாரும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தற்போதைய போர் சூழ்நிலையால் மகிழ்ச்சி அடையவில்லை எனவும் தெரிவித்தார்.
இருநாடுகளும் வாரத்திற்குச் சுமார் 7 ஆயிரம் வீரர்களை இழந்து வருவதாகவும் இந்தப் போர் மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு எனவும் டிரம்ப் சாடினார்.