10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாகக் கடந்த ஞாயிற்றுகிழமை நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியைக் காண வந்த அதிபர் ட்ரம்புக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கட்சித் தொண்டர்களை மட்டுமின்றித் தமது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விளையாட்டுப் போட்டிகளை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருகிறார். ஏற்கெனவே 2015-ல் அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னதாக, ட்ரம்ப் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியைக் காண வந்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நியூயார்க்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை, Arthur Ashe ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதிபர் ட்ரம்ப் இறுதிப் போட்டியை நேரில் காண வந்ததால், அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இறுதிப்போட்டி தொடங்கியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததால், ரசிகர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தனர்.
ஸ்டேடியத்துக்கு ட்ரம்ப் தனியாக வரவில்லை. மருமகன் (Jared Kushner) ஜாரெட் குஷ்னர், பேத்தி (Arabella Kushner) அரபெல்லா குஷ்னர், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (Pam Bondi) பாம் பாண்டி, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் (Steve Witkoff ) ஸ்டீவ் விட்காஃப் மற்றும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் (Karoline Leavitt) கரோலின் லீவிட் ஆகியோருடன் அதிபர் ட்ரம்ப் வந்திருந்தார்.
ட்ரம்ப் வருகையால் பிரபலங்கள் உட்பட பெரும்பாலான ரசிகர்கள், வெகு தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பல மைல்கள் தூரம் நடந்தே ஸ்டேடியத்துக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
கடைசி நேரத்தில் ட்ரம்ப் வருவதாக முடிவு செய்ததால், ரசிகர்களையும் அவர்கள் பைகளையும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 24,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் இதனாலேயே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
போட்டியைக் காண சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த டென்னிஸ் ரசிகர்கள் இதற்கெல்லாம் ட்ரம்பும் அவரது சுயநலமும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மைதானத்தில் இருந்த LED திரையில் அதிபர் ட்ரம்ப் காட்டப்பட்டபோது ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டதால், பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதற்கிடையே, இறுதிப் போட்டியை நேரில் பார்க்க விரும்பியதாகக் கூறிய ட்ரம்ப், வெற்றிப் பெற்ற கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜானிக் சின்னர் இருவரையும் பாராட்டியுள்ளார். நல்ல டென்னிஸ் ரசிகர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்று கூறிய ட்ரம்ப், முற்போக்கான ரசிகர்கள் என்றும் கிண்டலடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு அமெரிக்க ஓபன் அமைப்பாளர்களால் ட்ரம்ப் அழைக்கப்படவில்லை. மாறாகப் போட்டிகளின் Sponsor ஆன ROLEX நிறுவனத்தின் “client guest,” ஆகவே ட்ரம்ப் பங்கேற்றார்.