இணையத்தில் அவ்வப்போது சில ட்ரெண்டுகள் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது NANO BANANA ட்ரெண்ட் இணையத்தை கலக்கி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
கடந்த மாதம் 26ம் தேதி, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில், 3 வாழைப்பழங்களின் emoji-கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதற்கு என்ன அர்த்தம், கூகுள் புதியதாக ஏதேனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என அப்போது இணையத்தில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வந்தது.
cut பண்ணி open செய்தால், அந்த NANO BANANA இன்று இணையத்தையே அல்லோகலப்படுத்தி வருகிறது. ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான்.
சில மாதங்களுக்கு முன்பு CHATGPT அறிமுகம் செய்த Studio Ghibli என்ற ட்ரெண்ட் ஒட்டுமொத்த இணையத்தையே முழுமையாக ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கம் சற்று தணிந்த நிலையில், தற்போது கூகுளின் NANO BANANA ட்ரெண்ட் சோஷியல் மீடியாவில் பெரும் செல்வாக்கு செலுத்த தொடங்குகியுள்ளது.
ஒருவரின் புகைப்படத்தை 3D மாதிரியாக மாற்றுவதுதான் NANO BANANA ட்ரெண்ட். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் டூல்-தான் புகைப்படங்களை 3D மாதிரியாக மாற்றி வழங்கி வருகிறது.
இந்த 3D மாதிரிகள் நாம் பதிவேற்றும் புகைப்படங்களில் உள்ள முகபாவங்கள், உடைகளின் மடிப்பு உள்ளிட்டவற்றை அப்படியே துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இதனால், 3D மாதிரி பார்ப்பதற்கு உண்மையான சிலைப் போலவே காட்சியளிப்பது NANO BANANA-ன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இது இலவச டூல் என்பதால் இணையவாசிகள் அனைவரும், தங்களது படங்களையும், தங்களுக்கு வேண்டியர்களின் படங்களையும் 3D மாதிரியாக மாற்றிப் பகிர்ந்து வருகின்றனர்.
ஏதோ இளைஞர்கள் மட்டும்தான் இந்த ட்ரெண்டில் இணைந்துள்ளார்கள் என நினைக்க வேண்டாம். திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரையும், இந்த NANO BANANA-ன் ஆக்டோபஸ் கரங்கள் கட்டி இழுத்துள்ளன.
அண்மையில், அசாம் மாநிலத்தின் முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாகூட இந்த ட்ரெண்டில் இணைந்து, தனது 3D மாதிரி படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். சிலர் தங்களது புகைப்படங்களை மட்டுமல்லாமல் தங்களது செல்லப் பிராணிகள், பிடித்த அனிமேஷன் கேரக்டர்கள், பிடித்த நடிகர்களின் படங்களையும் 3D-ஆக மாற்றி வருகின்றனர்
Google AI Studio இணையதளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Try Nano Banana’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அனைவராலும் தங்களது படத்தின் மினியேச்சர் வடிவத்தை உருவாக்க முடியும். Nano Banana மூலம் உருவாக்கப்படும் 3டி மாதிரிகளை ஆர்டர் செய்து நிஜமான சிலைகளாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும் எனப் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.