தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகத் தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரைகள் மீது 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கக் கல்வித்துறை செயலாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் பரிந்துரை அளித்துள்ளதாகக் கூறினார்.
ஒவ்வொரு பள்ளியும் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனவா என ஆராய்ந்து, அதன் அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பிக்கும் என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, கல்வித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.