பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் தான் பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவளித்து வருகிறார் என்ற உண்மையை ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதியே கூறியிருப்பது இருப்பது, இந்தியாவின் குற்றச்சாட்டை உண்மை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது இடங்களையும் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாம்களையும் துல்லியமாக இந்தியா தாக்கி அழித்தது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகிய பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் அரசு மரியாதையுடன் பலத்த பாதுகாப்புடன் நடந்தன. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபர்கான், பாகிஸ்தான் பஞ்சாப் எம்எல்ஏ உஸ்மான் அன்வர் மற்றும் பல இராணுவ அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹபீஸ் அப்துர் ரவூப்பும் பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
ஏற்கெனவே, இந்தப் புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், இதே புகைப்படத்தைக் காட்டி பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்ற இந்தியாவின் தொடர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இந்தப் புகைப்படம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்மீரி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் தான், இராணுவ அதிகாரிகளைப் பயங்கரவாதிகளின் இறுதி சடங்குக்குச் செல்ல உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை, கைபர் பக்துன்க்வாவில் நடைபெற்ற 38வது ஆண்டு மிஷன் முஸ்தபா மாநாட்டில், பேசிய இலியாஸ் கஷ்மீரி, அசிம் முனீரும் பாகிஸ்தான் இராணுவமும் ஜிகாதிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துவருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அசிம் முனீர் இராணுவ மரியாதை செலுத்தியதை உறுதிப்படுத்திய பயங்கரவாதி இலியாஸ் கஷ்மீரி, பலியான பயங்கரவாதிகளின் இறுதிசடங்கை அரசு மரியாதையுடன் நடப்பதற்கு அசிம் முனீர் உத்தரவிட்டார் என்றும் , பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளையும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஆணை பிறப்பித்தார் என்றும், இறுதி சடங்குக்கு ராணுவப் பாதுகாப்பும் அளித்தார் என்றும் பொதுமேடையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த மும்பை தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் மசூத் அசார் இருந்தார் என்பதையும் வெளிப்படையாக இலியாஸ் கஷ்மீரி உறுதி செய்துள்ளார். இதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி, சைபுல்லா கசூரி பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்ரேஷன் சிந்தூரின் போது தரைமட்டமாக்கப்பட்ட முரிட்கே பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்கப் பாகிஸ்தான் அரசும், இராணுவமும் நிதியுதவி செய்துள்ளதாக அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்தே ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதை இந்தியா மீண்டும் மீண்டும் ஆதாரத்துடன் சர்வதேச அரங்கில் நிரூபித்து வருகிறது.
இப்போது,ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாதிகளே, தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் தான் உதவுகிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.