ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்றதில் இருந்து சுயத் தம்பட்டம் அடித்துவரும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானை முஸ்லீம் நாடுகளின் தலைவராகப் பறைசாற்றி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது… இஸ்லாமிய நேட்டோ உருவாகும் முன்பே, அதற்கான தலைவராகத் தன்னை சித்தரித்துக் கொண்டிருப்பதும் பேசு பொருளாகியுள்ளது.
அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் தேதி நடந்த அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ‘நேட்டோ’ போன்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து நேட்டோ படையை அமைத்திருப்பதால், அந்நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. ஏனெனில் நேட்டோவில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டதால், அந்தக் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் எதிரி நாட்டை திருப்பித் தாக்கும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் உலகத்தை தனது பின்னால் அணி திரட்டும் முயற்சியை மீண்டும் ஒருமுறை மேற்கொண்டுள்ளது. அதன்படி உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாவலனாக, சுயமாக நியமிக்கப்பட்ட தலைவராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத் துடிக்கிறது. ஒரே இஸ்லாமிய அணுசக்தி நாடு என்ற தனது அந்தஸ்தை அவ்வப்போது தம்பட்டம் அடித்துக் கொள்கிறது பாகிஸ்தான்.
இஸ்லாமிய நேட்டோ உருவாகும் முன்னரே அதனை வழிநடத்துவது போன்று கற்பனை உலகில் பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மிதக்கத் தொடங்கியிருக்கிறார். வெளிநாடுகளில் பாகிஸ்தானின் அதிகாரத்தை வெளிப்படுத்தவும், உள்நாட்டில் ஆதரவை திரட்டவும் அவர் இஸ்லாமிய நேட்டோ என்ற கற்பனை குதிரையை தட்டி எழுப்பியிருக்கிறார். பாகிஸ்தானின் திவாலான பொருளாதாரம், உலக நாடுகள் மத்தியில் குறைந்து வரும் நம்பகத் தன்மையை அசிம் முனீர் கவனிக்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
பாகிஸ்தானின் அணுஆயுதக் கிடங்கையும், முஸ்லீம் நாடுகளில் பாகிஸ்தான் தவிர்க்க முடியாத சக்தி என்பதையும் குறிப்பிட்டு ஃபீல்ட் மார்ஷர் அசிம் முனீர் பிதற்றிக் கொண்டிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சவுதி அரேபியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தானின் அணுசக்தி குடை ரியாத் வரை பரவியிருப்பதாக கூறியிருந்ததே அதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
கத்தாரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அசிம் முனீர் கூறிய இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு பற்றிக் கருத்தை பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜாவும் எதிரொலித்திருந்தனர். ஏற்கனவே பொருளாதார ரீதியாக முடங்கிப் போயுள்ள பாகிஸ்தான், சர்வதேச பண நிதியம் மற்றும் சீனா, சவுதி அரேபியா நாடுகளிடம் கடன் பெற்று காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது.
பணவீக்கமும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தொழில்துறை வளர்ச்சி அதளப் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இஸ்லாமாபாத்தின் அணுசக்தி மட்டுமே விற்க எஞ்சியிருக்கும் சொத்துகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், முஸ்லீம் உலகின் பாதுகாவலன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்வதன் மூலம், பணக்கார வளைகுடா நாடுகளின் அரசியல் ஆதரவாளராக மாற்றவும் , பாகிஸ்தான் குறியீட்டுத் தலைமையைப் பணமாகவும் மாற்ற முயற்சிக்கிறது.
சர்வதேச அளவிலான நிகழ்வுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஒரு துணை நடிகராகக் காட்டி, தனது அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் விரிவுபடுத்தி வருகிறார் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்… வெளிநாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைத் தேடும் அதே வேளையில் தீவிரவாத குழுக்களை வளர்ப்பதில் உள்ள பாகிஸ்தான் பங்கு, பிற நாடுகளிடையே அந்நாட்டின் மீதான நம்பகத்தன்மையை குறைத்து வருகிறது..
இஸ்லாமிய நேட்டோ என்ற பாகிஸ்தானின் முழக்கம், இந்தியாவை எதிர்ப்பது என்ற பழைய தொனியையே கொண்டிருக்கிறது… சீனா, துருக்கி நாடுகளின் ஆதரவு இருந்தபோதும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவிடம் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்… இது பாகிஸ்தானுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய, இந்தியாவை இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் சித்தரிப்பதை இரட்டிப்பாக்கியது… ஆனால், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானின் இந்தக் கூற்று, உலக நாடுகளிடையே எடுபடவில்லை.
இஸ்லாமிய நேட்டோ என ஒரு பக்கம் பாகிஸ்தான் கொக்கரித்தாலும், இத்திட்டம் வெற்றிப் பெற வாய்ப்பில்லை என்பதே பழைய வரலாறுகள் கூறுகின்றன… பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் ஒருநாள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லுமானால், அது அந்நாட்டின் மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்துவிடும் என்ற சர்வதேச அச்சம் உள்ளது.
அது மட்டுமின்றி, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமான பிளவு, ஒருங்கிணைந்த இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவை சாத்தியமற்றதாக்கிவிடும் என்பதும், வெறுமையில் இயங்கும் ஒரு நாடு, போட்டி நலன்களால் பிளவுபட்ட நாடுகளின் சக்திவாய்ந்த கூட்டத்தை வழிநடத்த முடியாது என்பதும் சர்வதேச அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.