காதலனை கரம்பிடிக்க வந்த அமெரிக்க வாழ் இந்திய பெண் ஒருவர் உயிரோடு எரித்துக்கொலைச் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பஞ்சாபில் அரங்கேறியுள்ளது. கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்யப்பட்டது ஏன் பார்க்கலாம் விரிவாக..
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண்ணான ரூபிந்தர் கவுர் பாந்தர்தான், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உயிரோடு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டவர்.
கணவருடனான விவாகரத்துக்குப் பின், மீண்டும் புதிய வாழ்க்கையை தேட தொடங்கியிருக்கிறார் இந்திய வம்சாவளியான அமெரிக்கப் பெண் ரூபிந்தர்க் கவுர். அவரது தேடலுக்கு விடையாக ஆன்லைன் திருமண செயலி மூலம் அறிமுகமாகியிருக்கிறார் 75 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சரஞ்சித் சிங் கிரேவால்.
இருவருக்கும் ஏற்கெனவே விவகாரத்து ஆன நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் காதலை வளர்த்துள்ளது. சரஞ்சித் சிங் கிரேவாலை கைப்பிடிக்க விரும்பிய ரூபிந்தர் கவுர் திருமணத்தை தனது மூதாதையர்கள் வாழ்ந்த பஞ்சாப் மாநிலத்தில் நடத்திக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார். இதற்குக் கிரேவாலும் உடன் படவே, கடந்த ஜூலையில் அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருக்கிறார் ரூபிந்தர் கவுர்.
ஆனால், சில நாட்களில் ரூபிந்தர்சிங் மாயமாகியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி கமல் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதன் பின்பு விசாரணை சூடுபிடிக்க, கிரேவாலிடம் அடிக்கடி பேசியதாகப் பஞ்சாப் மாநிலத்தின் மல்காபட்டியைச் சேர்ந்த சுக்ஜித்சிங் சோன் என்பவர் போலீசாரின் வலையில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், சுக்ஜித்சிங் அளித்த வாக்குமூலம் அனைவரையும் திடுக்கிட செய்தது.
ரூபிந்தர் கவுரிடம் அதிகளவில் பணம் பறித்துக் கொண்டிருந்த கிரேவால், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் பின்வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில், ரூபிந்தரை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்திருக்கிறார். இதற்காகச் சுக்ஜித்சிங்கிடம் கிரேவால் 50 லட்சம் ரூபாய் வரைப் பேரம் பேசியதும், இங்கிலாந்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதன்படி ஜூலை 12ம் தேதி திட்டமிட்டபடி ராய்ப்பூரில் உள்ள வீட்டிற்கு ரூபிந்தரை அழைத்துச் சென்ற சுக்ஜித்சிங், பேஸ்பால் மட்டையால் அவரை கொடூரமாக அடித்துக் கொலைச் செய்திருக்கிறார். ஆதாரங்களை அழிக்க நிலக்கரியைக் கொண்டு ரூபிந்தர் உடலை எரித்திருக்கிறார். ரூபிந்தரின் எரிந்த உடலை நான்கு பைகளில் தனித்தனியாக அடைத்து, குங்ரானா கிராமத்தில் உள்ள வடிகாலில் வீசியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாகச் சுக்ஜித்சிங்கை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி, குங்ரானா கிராமத்தில் உள்ள வடிகாலில் எரிந்த உடல் பாகங்களையும், உடைந்த ஐ-போனையும் மீட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் கிரேவால் பேசியபடி 50 லட்சம் ரூபாய் பணத்தைச் சுக்ஜிங்சிங்கிற்கு தராமல் கம்பி நீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியான கிரேவால் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இந்த வழக்கு வெறும் கொலை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் மனித ஒழுக்கத்திற்கு இழைக்கப்பட்ட கொடூரமான துரோகம் என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பெண் ஒருவரைக் காதல் என்ற பெயரில் ஏமாற்றி, கொலைச் செய்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.