ஆப்கானிஸ்தானின் முக்கிய விமான தளமான பக்ராமை கைப்பற்ற அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், அந்த விமான தளத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனத் தலிபான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாக்ராம் தளத்தின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பக்ராம் விமான தளம். 1,492 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தளம், 1950களில் சோவியத் அரசால் கட்டப்பட்டது.
அதிநவீன ஆயுதங்களை கையாளும் வசதி, நவீனக் கட்டுப்பாட்டு கோபுரம், 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, சுரங்க பாதை உள்ளிட்டவற்றை இந்தப் பக்ராம் விமான தளம் கொண்டுள்ளது. இப்பகுதியில் சிறைச்சாலையும் உள்ள நிலையில், முந்தைய காலங்களில் இங்குதான் தாலிபன் மற்றும் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த முக்கிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இத்தனைக்கும் மேலாகச் சீன அணுசக்தி நிலையங்களுக்கு அருகாமையில் பக்ராம் விமான தளம் அமைந்துள்ளது. கடைசியாகக் கூறப்பட்ட இந்தக் காரணம்தான், இந்தப் பகுதியின் மீது அமெரிக்காவின் பார்வையை ஈர்த்துள்ளது. இந்த விமான தளம் அண்மைக் காலம் வரை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது.
2001ம் ஆண்டு நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைத்த அமெரிக்க ராணுவம், அங்கு தனது துருப்புகளை நிறுத்தி வைத்தது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும்கூட அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறவில்லை.
இந்நிலையில், ராணுவ செலவு உள்ளிட்ட சில காரணங்களால் 2021ம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அப்போது, பக்ராம் விமான தளத்தில் இருந்தும் அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்தார்.
பக்ராம் விமான தளத்தைத் தாலிபான்களிடம் விட்டுக்கொடுத்த பைடனின் நடவடிக்கைக்கு ட்ரம்ப் தொடக்கம் முதலே அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்நிலையில், அந்த விமான தளத்தை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அவர் வெளிப்படையாகவே தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பக்ராம் விமான தளம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனக் கூறினார். இந்தத் தளம் மேற்கு சீனாவிற்கு அருகாமையில் உள்ளதால், அதனை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், சீனா தனது அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில்தான் பக்ராம் உள்ளதையும் அவர்ச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், ஆப்கான் அரசு பக்ராம் விமான தளத்தை விட்டுதர முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இது குறித்து பேசிய ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாகிர் ஜலால், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகள் மீண்டும் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஆசியாவில் தனது துருப்புகளை மீண்டும் நிலை நிறுத்தவும், சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்த விமான தளம் அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதுகிறது. எனவே, என்ன விலைக் கொடுத்தேனும் பக்ராம் தளத்தைக் கைப்பற்றும் முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
















