பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் தெரிவித்ததாக ஜிஹாதி பயங்கரவாதியும், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவருமான யாசின் மாலிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். யாசின் மாலிக்கை மன்மோகன் சிங் சந்தித்தது ஏன்? நன்றித் தெரிவித்தது ஏன்? என்பது பற்றி விரிவாக இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
காஷ்மீர் இந்துக்களின் இனப்படுகொலை, நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகளைக் கொடூரமாகக் கொன்றது உட்பட பல பயங்கரவாத குற்றங்களுக்காக, திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதி யாசின் மாலிக்.
காஷ்மீரின் காசா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீநகரின் மைசுமா பகுதியில் பிறந்த யாசின் மாலிக், ஜம்மு-காஷ்மீர் விடுதலைக்காக, ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பை தொடங்கி, இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வந்தார். பாகிஸ்தான் பயங்கவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய யாசின் மாலிக், இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்து வந்தார்.
2004-ல் நடந்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், சோனியா காந்தி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமைக் கோரியது. அப்போது குடியரசு தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம், இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக அரசியலமைப்பில் அனுமதியில்லை என்று கூறி சோனியா காந்தி பிரதமராவதை அனுமதிக்கவில்லை. எனவே சோனியா காந்தி மன்மோகன் சிங்கை நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். பிறகு, திரிபுராவில் இருந்து மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப் பட்டு, இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் ஆக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் நெருங்கிய நபராக இருந்த யாசின் மாலிக்கையும் ஆதரித்தது.
காஷ்மீர் இந்துக்களின் இனப் படுகொலைக்குக் காரணம் யாசின் மாலிக் தான் என்று அறிந்திருந்தும், காங்கிரஸ் அவரை ஜனநாயகத் தலைவராக நியாயப்படுத்த முயற்சி செய்தது. ஆனாலும்,சர்வதேச தொலைக்காட்சி நேர்காணலில் இந்திய விமானப்படை அதிகாரிகளைத் தாம் கொன்றதாக எந்தத் தயக்கமும் இல்லாமல் யாசின் மாலிக் ஒப்புக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், யாசின் மாலிக்கை வரவேற்றுக் கைகுலுக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜிஹாதி பயங்கரவாதி யாசின் மாலிக் கைகுலுக்கும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை தலைநகர் டெல்லியில் ஒட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019-ல் காஷ்மீரில் இயங்கி வந்த யாசின் மாலிக்கின் JKLF உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் மத்திய அரசால் தடைச் செய்யப்பட்டன. பிறகு,ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவு நீக்கப்பட்டது. பயங்கரவாத நிதியுதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசத்துரோகக் குற்றங்களுக்காக யாசின் மாலிக்-க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மும்பைப் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை 2006-ல் பாகிஸ்தானில் ஒரு ஜிகாதிகள் மாநாட்டுக்குச் சென்றபோது சந்தித்ததாக யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,டெல்லியில், அப்போதைய சிறப்பு புலனாய்வு துறை இயக்குநர் வி.கே. ஜோஷி தன்னைச் சந்தித்ததாகவும், அப்போதைய பிரதமர் சிங்கின் அமைதி முயற்சிகளை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் யாசின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். மும்பைப் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா (LeT) நிறுவனரான ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களையும் பேச்சுவார்த்தைகளில் சேர்க்காவிட்டால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்காது என்று அப்போதைய காங்கிரஸ் அரசு தமக்கு வெளிப்படையாகத் தெரிவித்ததாக யாசின் மாலிக் தனது பிராமண பத்திரத்தில் விளக்கியுள்ளார்.
சயீதைச் சந்தித்து விட்டு இந்தியா திரும்பிய தம்மை, டெல்லியில் ஒரு ஹோட்டலில் சந்தித்த உளவுத்துறை அதிகாரி, அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங்கைச் சந்திக்கக் கூட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார். அன்று மாலையே, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயண் உடனிருக்க, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பாகிஸ்தான் சந்திப்புகள் பற்றி விளக்கியதாகத் தெரிவித்த யாசின் மாலிக், தமக்கு நன்றித் தெரிவித்த மன்மோகன் சிங், காஷ்மீரில் அகிம்சை இயக்கத்தின் தந்தை என்று தம்மைப் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை அதிகாரிகளைக் கொன்றது, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீத்தின் மகள் ரூபியா சயீத்தைக் கடத்தியது, காஷ்மீர் இந்துக்கள் இனப் படுகொலை எனப் பல பயங்கரவாத குற்ற சரித்திரம் கொண்டுள்ள பயங்கரவாதியை முன்னாள் பிரதமர் சந்தித்து நன்றிக் கூறியதும், கை குலுக்கி ராஜ மரியாதைக் கொடுத்ததும், காங்கிரசின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.