அடுத்த மாதம் 12-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் தொடங்கவுள்ள பிரச்சார யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்களும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையில் குறைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
குறைகள் கண்டறியப்பட்டால் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை பெற்று சரி செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யின் தாய், தந்தையர் காஞ்சி மடத்தில் ஜெயேந்திரரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு நல்ல விஷயம் தான் என்று தெரிவித்தார்.
விஜயின் கட்சி கொள்கை என்னவென்று தெரியாது இருந்தாலும் பக்தி வேறு, கொள்கை வேறு என்றும் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.