நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாகியும் ஓயாமல் நீடித்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாகக் கூறி இந்தியாவுக்கு வரி விதித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஆனால், நோட்டோ உறுப்பு நாடான ஹங்கேரி மற்ற நாடுகளை விடவும் 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்ய எண்ணெயைத் தற்போதும் சத்தம் இல்லாமல் இறக்குமதி செய்து வருகிறது.
ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாக குறைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில் ஹங்கேரி அதிலிருந்து பின்வாங்காமல் ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தம் இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து புதைபடிவ பொருட்ளை கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பன். ரஷ்ய எண்ணெயைப் புறக்கணிப்பது ஹங்கேரியின் பொருளாதாரத்திற்கு பேரழிவைத் தரும் என்றும் அவர் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார்.
சமீபத்திய தரவுகளின்படி உக்ரைன் போருக்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து 61 சதவிகிதம் அளவுக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த ஹங்கேரி தற்போது 86 சதவிகிதம் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. இதே போன்று ஸ்லோவாக்கியாவும் ரஷ்ய எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டு ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான உறுதிமொழி இருந்தபோதிலும், இரு நாடுகளும் டர்க்ஸ்ட்ரீம் குழாய் வழியாக மாஸ்கோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகங்களை தங்கு தடையின்றி தொடர்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து, 80 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணெய் வாங்குவதன் மூலம், ஹங்கேரி மாஸ்கோவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிப்பதாகவும், மேற்கத்திய தடைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, நேட்டோவின் ஒற்றுமையையும் சோதிக்கிறது என்பது டிரம்பின் வாதமாக உள்ளது.
அண்மையில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதால், உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக உள்ளதாகக் கூறினார். ஆனால் மன்னிக்க முடியாத வகையில், நேட்டோ நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தியை புறக்கணிக்காமல் உள்ளதாக விமர்சித்தார். டிரம்பைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான ஹங்கேரியின் ஒப்பந்தங்கள் எரிச்சலூட்டும் செயல் மட்டுமல்ல, நேட்டோவின் நோக்கத்திற்கு ஒரு அடிப்படை துரோகமாகமாகவும் உள்ளது.
ஆனால் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஹங்கேரி, ரஷ்யாவைத் தவிர எங்கிருந்தோ எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது கனவு காண்பது போல் நன்றாக இருக்குமே தவிர சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ரஷ்ய இறக்குமதிகளை தடுக்க ஐரோப்பிய ஒன்றிய அளவிலான முயற்சிகளை ஹங்கேரி பலமுறை வீட்டோ செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஹங்கேரியும், ஸ்லோவாக்கியாவும் சுமார் 6 பில்லியன் வரி வருவாயை ரஷ்யாவுக்கு செலுத்தியிருப்பதாகவும், இது ஆயிரக்கணக்கான ரஷ்ய கப்பல் ஏவுகணைகளுக்குப் போதுமானது என்றும் அட்லாண்டிக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்தியாவுக்கு வரி விதிப்பதை போல் ஹங்கேரிக்கு அதிகமான வரியை விதிக்க டிரம்ப் அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.