கரூர் மற்றும் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், கரூரில் அரசியல் பலத்தை பறைசாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு விஜய் வருவதை காலதாமதப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தும், பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் இதை எதையுமே கண்டு கொள்ளவில்லை என்றும் காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவெகவின் முக்கிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர், கூட இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாமக்கல் பரப்புரை குறித்து காவல்துறை பதிவு செய்த எப்.ஐ.ஆரில் வளையப்பட்டி, புதுப்பட்டி, நாகராஜபுரம் வழியாக வந்த விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்து நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது.
பரப்புரையின் போது கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல், உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்திடம் காவல்துறை பலமுறை எச்சரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சரிவர ஒழுங்கப்படுத்தாததால் கூட்ட நெரிசலால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜய் வருவதை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தியதால் மக்கள் சோர்வடைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.